மனித குலத்திற்கு மகிழ்ச்சியான செய்தி.. கொரோனாவிலிருந்து மீளும் உலக நாடுகள்.. முழு ரிப்போர்ட்
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டுவருகின்றன.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி உயிரிழப்புகளையும் பொருளாதார பேரிழப்பையும் ஏற்படுத்திவருகிறது. உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தையும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தையும் கடந்துவிட்டது.
அமெரிக்கா, ஸ்பெய்ன், இத்தாலி ஆகிய நாடுகள் தான், கொரோனா உருவான சீனாவை விட பேரிழப்பை சந்தித்த நாடுகள். அமெரிக்காவில் பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கிவிட்ட நிலையில், 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெய்ன் மற்றும் ஃப்ரான்ஸில் 23 ஆயிரம் பேரும் இத்தாலியில் 26 ஆயிரத்துக்கு அதிகமானோரும் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒன்றரை மாதமாக கொரோனா பாதிப்பு உலகளவில் பேரழிவை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது கொரோனா பாதிப்பிலிருந்து உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவருகின்றன.
கொரோனா உருவான வூஹான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைசி நோயாளியும் குணமடைந்துவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 4633 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நேற்று சீனாவில் யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. சீனா முழுவதிலும் மொத்தமாக மூவருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களில் இருவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். கொரோனா உருவான வூஹானில் புதிதாக தொற்று இல்லாத நிலையில், கடைசி நோயாளியும் குணமடைந்திருப்பது உலக நாடுகளுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
அமெரிக்கா:
அமெரிக்காவில் இதுவரை 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிப்பு ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால் ஜார்ஜியா, ஒக்லஹாமா, சௌத் கரோலினா, மிசிசிபி ஆகிய மாகாணங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
ஐரோப்பா:
அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடுகள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஸ்பெய்னில் இதுவரை 2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 23 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கும் பாதிப்பு கட்டுக்குள் வந்திருப்பதால் ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படுகிறது. ஸ்பெய்னில் 6 வாரங்களுக்கு பிறகு குழந்தைகள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். மே 4 முதல் உறவினர்களை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியிலும் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பதோடு, பூங்காக்களும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தடகள வீரர்கள் பயிற்சியை தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஒரு மாதமாக இத்தாலியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், நேற்று வெறும் 260 பேர் மட்டுமே உயிரிழந்திருக்கின்றனர். ஊரடங்கில் மற்ற தளர்வுகள் செய்யப்பட்டாலும், பள்ளிகள் செப்டம்பர் வரை திறக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலும் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர் மீண்டும் பணிகளை தொடங்கிவிட்டார்.
ஆசியா:
ஆசியாவை பொறுத்தமட்டில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் பாதிப்பு அதிகம். சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருப்பது உலக நாடுகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இந்தியாவில் பாதிப்பு தினமும் அதிகரித்தாலும் சமூக தொற்றாக மாறவில்லை.
ஆனால் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. அதேவேளையில் அதிகமானோர் குணமடைந்துவருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் கொரோனா பரவல் மையங்களாக இருந்த பகுதிகள், கொரோனா அற்ற பகுதிகளாக மாறிவருகின்றன என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஊரடங்கால் கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசியாவை பொறுத்தமட்டில் சீனா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக சிங்கப்பூரில் அதிர்ச்சியளிக்கும் விதமாக தினமும் தொற்று அதிகரித்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் சுமார் 15 ஆயிரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள். சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 921 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தென்கொரியாவில் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்புகிறது. தென்கொரியாவில் தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன.
நியூசிலாந்தில் வெறும் 1500 பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 80% பேர் குணமடைந்துவிட்டனர். 19 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். நியூசிலாந்தில் உள்ளூர் பரவலே இல்லை என்றும் நியூசிலாந்து, கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அந்நாடு அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா கண்டத்தில் கொரோனா தாக்கம் பெரியளவில் இல்லை. தென்னாப்பிரிக்காவில் 4500 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கியூபா மருத்துவர்கள் சென்று சிகிச்சையளித்துவருகின்றனர். பாகிஸ்தானில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்குகிறது. அங்கு மருத்துவ உட்கட்டமைப்பு சரியாக இல்லாததால் கொரோனாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் திணறுகிறது.
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஸ்பெய்ன், இத்தாலி, அமெரிக்கா ஆகிய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பிலிருந்து மீண்டு ஊரடங்கை தளர்த்திவருவதும் வூஹான் நகரம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்டிருப்பதும் மனித குலத்திற்கே மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக அமைந்துள்ளது.