கொரோனா வைரஸ் உருவான இடத்தில் பறிதவிப்பு... அனுமதி கொடுக்காத சீனா... பரபரக்கும் இந்தியா..!
99 சதவீதம் பேர் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் வுகானில் இருந்து வெளியேற இதுவரை சீனா அனுமதி கொடுக்கவில்லை.
சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ மிரட்டி வருவதைத் தொடர்ந்து வுகான் நகரில் உள்ள 500 இந்தியர்களை மீட்க, ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 747 ரக விமானம் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகிறது. குறிப்பாக இந்த வைரஸ் உருவான வுகான் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதோடு உயிர் பயத்திலும் இருக்கிறார்கள். இதனால் வுகான் நகரம் அமைந்துள்ள கியூபி மாகாணம் முழுமையாக மயான அமைதியாக முடக்கப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 106 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 1,500 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் கியூபி மாகாணத்தில் பஸ், ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 1 கோடி பேர் வசிக்கும் வுகான் நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வுகான் நகரிலும் அதை சுற்றியுள்ள நகரங்களிலும் சுமார் 700 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மருத்துவ மாணவர்கள் தான். தற்போது சீனாவில் நியூ இயர் தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான இந்தியர்கள் சொந்த நாட்டிற்கு வந்தவர்களையும் திருப்பி அனுப்பவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இருந்த போதிலும் அவர்கள் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என்று அரசு நிர்வாகம் அவர்களை அறிவுறுத்தியுள்ளது.
கெரோனோ வைரஸ் உருவானதாக கூறப்படும் வுகான் நகரில் தற்போது 300 முதல் 500 இந்தியர்கள் வரை இருப்பதாக கருதப்படுகிறது. சீனாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி பேசி வருகிறார்கள். சில இடங்களில் மட்டும் முகமூடி மற்றும் உணவு கிடைக்காமல் இந்தியர்கள் தவிப்பதாக சொல்லப்பட்டு வருகின்றது. வுகானில் உள்ள பெரும்பாலான இந்திய மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து தங்கள் கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ளனர்.
அவர்களில் 99 சதவீதம் பேர் இந்தியா திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் வுகானில் இருந்து வெளியேற இதுவரை சீனா அனுமதி கொடுக்கவில்லை. இதனால் வுகானில் சிக்கி உள்ள இந்தியர்களின் தவிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அவர்களை இந்தியா அழைத்து வரும் ஏற்பாடுகளை செய்ய தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-தெ.பாலமுருகன்