சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 106-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4,515 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

சீனாவில் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம காய்ச்சல் காரணமாக 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. கரோனா வைரஸ் சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் வவ்வால், பாம்பு போன்றவற்றில் இருந்து பரவி வருவதாக விஞ்ஞானிகள் கூறிவருகின்றனர். 

இந்நிலையில் வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்து வருகிறது. சுமார் 4,515 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கபட்டுள்ளனர். கரோனா வைரஸ் பரவ தொடங்கிய வுஹான் நகரம் உள்ளிட்ட 17 நகரங்களில் போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இந்த 17 நகரங்களில் தான் பெரும்பாலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மற்ற நகரங்களிலும் இந்த பாதிப்பு தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

முக்கியமான வேலை இருந்தால் மட்டும் சீனாவுக்கு பயணம் செய்ய வேண்டும். இல்லையென்றால் சீனாவுக்கு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்கா தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், கரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளனர். மாணவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பெய்ஜிங் துணை தூதர் தெரிவித்துள்ளார். இந்த நோய் தற்போது பல்வேறு நாடுகளில் பரவ தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.