உலகை அச்சுறுத்திய கொரோனாவை விரட்ட தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும், அடுத்த மாத மத்தியில் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு 1.36 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தின் உருவாக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரஷ்யாவின் செசனோவ் மருத்துவ பல்கலை மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக தெரிவித்தது.

இது குறித்து ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’கொரோனா தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனையில் பாதகமான நிகழ்வுகள், சுகாதார பிரச்னைகள், சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக மீண்டனர். சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நல்ல சகிப்புத்தன்மை குறித்து நம்பிக்கையை அளித்துள்ளது.

தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன. இம்மாத இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளதாக’’ தெரிவிக்கப்பட்டுள்ளது.