கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக  அவர்களுடன் இணைந்து மருத்துவர்கள் நடனமாடியுள்ள சம்பவம்  நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதற்கான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுகானில் தோன்றிய  கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவியுள்ளது . 

 

அதுமட்டுமல்லாமல் ஜப்பான் , சிங்கப்பூர் ,  தாய்லாந்து , ஆங்காங்,  ஆஸ்திரேலியா ,  பிரான்ஸ் ,  உள்ளிட்ட 24க்கும்  மேற்பட்ட நாடுகளுக்கும் அது பரவி உள்ளது ,  சீனாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் ,  நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுவரை  அந்த வைரசுக்கு சுமார் 1, 431 பேர் உயிரிழந்துள்ளனர் .   ஒரு  லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு  வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனாவை  கட்டுப்படுத்தமுடியாமல் சீனா  திணறி வருகிறது .  ஆனாலும் மன உறுதியோடு இரவு பகல் பாராமல்  தங்கள் வீடுகளுக்கு செல்லாமல்  உறக்கமில்லாமல் அந்நாட்டு மருத்துவர்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஆனாலும் இந்த கொரோனா வைரஸ் தங்கள் உயிரை பறித்து விடுமோ என்ற அச்சத்துடனேயே நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் .   இந்நிலையில் கொரோனாவின்  பிறப்பிடமான வுகான் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக மருத்துவமனை மருத்துவர்கள் அவர்களுடன் இணைந்து நடனமாடியுள்ளனர். இதற்கான  வீடியோ  சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.   இந்த வீடியோவுக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன், பொதுநலத்துடன் சேவை செய்யும் மருத்துவர்களையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.