2021 ம் ஆண்டின் நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசியை உலகளவில் வழங்க முடியும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் செய்தியாளர்களை  சந்திக்கையில் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. சுமார் 200க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் 2.68 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 87 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.89 கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்கா பிரேசில், இந்தியா, ரஷ்யா, பெரு உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை மேற்கண்ட நாடுகள் பெற்றுள்ளன. 

குறிப்பாக எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸ் தொற்றால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் மட்டும் 63 லட்சத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் 40 லட்சத்துக்கும் அதிகமானோரும், இந்தியாவில் 40. 27 லட்சத்துக்கும் அதிகமானோரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இந்த வைரஸை கட்டுப்படுத்த எத்தனையோ நடவடிக்கைகள்  எடுத்த போதிலும் இந்த வைரஸ் கட்டுக்கடங்காமல் மக்களை கொத்துக் கொத்தாக தாக்கி வருகிறது. பிரத்யேக தடுப்பூசி கண்டுபிடிக்கப் பட்டால் மட்டுமே வைரஸை கட்டுப்படுத்த முடியும் என ஒட்டுமொத்த உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. ஏற்கனவே ரஷ்யா தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்துள்ளது. 

அதேபோல் சீனாவும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக கூறி அதற்கான விலையையும், நிர்ணயித்துள்ளது. உள்ளது ஆனால் இதற்கிடையில் தடுப்பூசி தொடர்பாக பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறையான தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் மக்களுக்கு தடுப்பூசி  கிடைக்க அடுத்தாண்டு மையப்பகுதி வரை காத்திருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்த நிலையில்,  சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், 2021 ஆம் ஆண்டின் இரண்டாவது அல்லது மூன்றாம்  காலாண்டில் இந்த தடுப்பூசி உலகெங்கிலும் உள்ள நாடுகளை அடையக்கூடும் என கூறியுள்ளார். உலகெங்கிலும் 3ஆம் கட்ட சோதனையில் இருந்துவரும் தடுப்பூசிகளின் சோதனைகள் இந்த ஆண்டுக்குள் நிறைவடையாவிட்டால் அதற்கேற்ற காலவரிசை முடிவு செய்யப்பட்டுள்ளது. சோதனைகள் முடிந்த பின்னரே தடுப்பூசிகள் வெகுஜனத்திற்காக உற்பத்தி செய்யப்படும் என கூறியுள்ளார். 2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசியை உலகளவில் வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் மூன்றாவது கட்ட சோதனையில் இரண்டு தடுப்பூசிகள் இருந்து வரும் நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்கா தொற்றுநோயியல் நிபுணர் அந்தோணி பௌசி, மாடர்னா மற்றும் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசிகள் மக்கள் பரிசோதனையில் இருந்து வருகிறது. இந்த தடுப்பூசி பரிசோதனை என்பது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பயன்படுத்தப்பட வேண்டும், குறிப்பாக லத்தீன் அமெரிக்க மற்றும் கருப்பின மக்கள் மத்தியில் இது பரிசோதிப்பது அவசியம் எனக் கூறியுள்ளார். அவர்களை பரிசோதனையில் அதிகம் சேர்ப்பதன் மூலம் சிறந்த தடுப்பூசி முடிவுகளை ஏற்படுத்தும் எனக் கூறியுள்ளார்.