அமெரிக்க மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி அவசியம் இல்லை எனவும், ஒருவேளை மருந்து தயாரிக்கப்பட்டால் அதை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த கூடாது எனவும் அந்நாட்டின் விஞ்ஞானியும் கொரோனா பணிக் குழுவின் உறுப்பினருமான அந்தோணி பாசி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்டி மோரிசன் தங்கள் நாட்டில் தடுப்பூசி தயாரானதும் அது அனைத்து  தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், அதை அனைவரும் போட்டுக் கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ள நிலையில்,  அந்தோணி பாசி இவ்வாறு கூறியுள்ளார். 

கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது, 180க்கும் அதிகமான நாடுகள் வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உலகளவில்  2.25 கோடி பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதுவரை 7.91 லட்சம் பேர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.1.53 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

57 லட்சத்துக்கும் அதிகமானோர், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 76 ஆயிரம் பேர், இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் சுமார் 30 லட்சத்து 62 ஆயிரம் பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 24 லட்சத்து 62 ஆயிரம் பேர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 16 ஆயிரம் பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதன் பாதிப்பு மேலும் தொடரும் என ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். மொத்தத்தில் பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே, வைரஸை கட்டுப்படுத்த முடியும் என்பதால், ஒட்டுமொத்த உலக  நாடுகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் தடுப்பூசி தொடர்பான பல்வேறு தகவல்கள் அன்றாடம் வெளியாகி வரும் நிலையில், அமெரிக்காவின்  தொற்று நோயியல் விஞ்ஞானியும் நாட்டின்  கொரோனா தடுப்பு பணிக்குழுவின் உறுப்பினருமான அந்தோணி பாஸி அமெரிக்க மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது அவசியம்  இல்லை என்று கூறியுள்ளார். தடுப்பூசி தயாரிக்கப்பட்ட உடன், அதை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்த முயற்சிக்கக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார். 

இதுவரை எந்த ஒரு தடுப்பூசியும் கட்டாயப்படுத்த படவில்லை எனக் கூறியுள்ளார். இருப்பினும் உள்ளூர் நிர்வாகம்  விரும்பினால், குழந்தைகளுக்கு அல்லது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு அதை வழங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். புதன்கிழமை ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய அவர் இதைக் கூறினார். முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆஸ்திரேலியாவில் கொரனோ தடுப்பூசி தயாரானதும், அது நாட்டிலுள்ள 2.5 கோடி மக்களுக்கும் இலவசமாக வழங்கப்படும் என்றும், தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயப்படுத்தப்படும் மாட்டாது என அமெரிக்க விஞ்ஞானி அந்தோணி பாசி தெரிவித்துள்ள கருத்து அனைத்து தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.