விரைவில் ஆஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டு அது ஆஸ்திரேலியாவிலுள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். அதற்கான ஆராய்ச்சி இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி உள்ளது. இதுவரை 2.21 கோடி பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.78 லட்சம் பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சுமார் 1.48  கோடி பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வைரஸ் தொற்றால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவிலேயே இந்த வைரஸ் தொற்று அதிகமாக உள்ளது. 

இதுவரை அந்நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 1 லட்சத்து 73 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின்  பட்டியலில் ஆஸ்திரேலியா 68-வது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 23 ஆயிரத்து 829 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெறும் 729 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். சுமார் 20 ஆயிரத்து 870 பேர்  வைரஸ் தொற்றிலிருந்து  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2730 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 19 பேர் மட்டுமே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  சரியான நேரத்தில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஆஸ்திரேலியாவில் வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒட்டு மொத்த உலகமும் தடுப்பூசி எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில்,  ஆஸ்திரேலியா அதற்கான ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள அந்நாட்டின்  பிரதமர் ஸ்காட் மோரிசன்,  தடுப்பூசி ஆராய்ச்சியில் ஆஸ்திரேலியா இறுதிக்கட்டத்தில் உள்ளதாக கூறியுள்ளார். ஸ்வீடன், பிரிட்டிஷ்  மருந்து ஆராய்ச்சி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனெகாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும்  பிரதமர் மோரிசன் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து மருந்து தயாரிக்கப்படுகிறது எனவும், இந்த தடுப்பூசி வெற்றிகரமாக அமைந்தால் அதை ஆஸ்திரேலியாவிலேயே உற்பத்தி செய்து 2.5 கோடி ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு, தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என  ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதேபோல், சீனாவும் தடுப்பூசி ஆராய்ச்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தடுப்பூசியின் மருந்து நிறுவனமான கன்சினோ பயோ மற்றும் பெய்ஜிங் இன்ஸ்டியூட் ஆப் பயோடெக்னாலஜி உருவாக்கியுள்ளது, அதற்கான சோதனை பாகிஸ்தானில் அது மேற்கொண்டு வருகிறது. அதற்காக கராச்சியில் 200 தன்னார்வலர்களுக்கு 56 நாட்கள் சோதனை நடத்த சீனா திட்டமிட்டு அதை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி ஆராய்ச்சி சீனா, ரஷ்யா, சிலி, அர்ஜென்டினா மற்றும் சவுதி அரேபியாவில் தொடங்கப்பட்டுள்ளது என சீனா தகவல்கள் தெரிவித்துள்ளது.