கொரோனா தன் கொடூர முகத்தை காட்டமுடியாத இரும்புக் கோட்டையாக இருந்து வந்த நியூசிலாந்தில், தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகியிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் அடுத்த 12 நாட்களுக்கு கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகில் கொரோனா வைரஸ்  பாதிப்பு குறைவாக உள்ள நாடுகளில் ஒன்று நியூஸிலாந்து. அங்கு இதுவரை மொத்தம் 1,122 பேர் மட்டுமே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில் இதுவரை 19 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம் அதிதீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்தியதே ஆகும். 

    

வைரஸ் பரவியபோது விழிப்புடன் செயல்பட்ட அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடுமையான ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதுடன் தனது நாட்டு எல்லைகளை ஒட்டு மொத்தமாக மூடி சீல் வைத்தாதுடன்,  சர்வதேச விமான போக்குவரத்தை அதிரடியாக தடை செய்தார். இதன் விளைவாக அந்நாட்டில் கொரோனா முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. விழிப்புடன் இருந்து எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து விளங்கியது. துரித நடவடிக்கை எடுத்து உலகிற்கே முன்மாதிரியாக விளங்கிய ஜெசிந்தா ஆர்டனை, சர்வதேச நாடுகள் வெகுவாக பாராட்டின. கிட்டத்தட்ட 102 நாட்களுக்கும் மேலாக பாதுகாப்பாக இருந்து நியூசிலாந்தில் தற்போது மெல்ல கொரோனா தலை காட்ட தொடங்கியுள்ளது. ஆக்லாந்து நகரில் மீண்டும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. ஆக்லாந்தில் புதிதாக 29 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் ஆர்டன்,  குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் வைரஸ் தொற்று பரவியுள்ளது. ஆனாலும் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது தொற்றின் மையப்புள்ளியாக ஆக்லாந்து மாறியுள்ளது. இதனால் நாடு முழுவதும் அடுத்த 12 நாட்களுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இருந்து மற்ற பகுதிகளுக்கு வைரஸ் பரவாமல்  இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இது நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் என்பது தெரியவந்துள்ளது. மொத்தத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்த 12 நாட்களில் தொற்றுக்கு முக்கிய காரணமாக உள்ளவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவார்கள். இதன்மூலம் நியூசிலாந்தில் முழுவதுமாக வைரஸ் கட்டுக்குள் வரக்கூடும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.