அடுத்த சில தினங்களில் 50 ஆயிரம் பலி..! 10 லட்சம் பாதிப்பு..! எச்சரிக்கும் WHO..!
அடுத்து வரும் சில நாட்களில் கொரோனாவால் இறப்போரின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கும் என்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் என உலக சுகாதர அமைப்பின் தலைவர் குட்ரோஸ் எச்சரித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இன்றைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு 47 ஆயிரத்து 251 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் 9 லட்சத்து 36 ஆயிரத்து 419 பேர் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனாவால் மக்கள் அனைவரும் பெருத்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்து வரும் சில நாட்களில் ஒருநாள் பலியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை எட்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் குட்ரோஸ் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது உலகம் முழுவதும் கடந்த ஐந்து வாரங்களில் கொரோனா நோய்க்கு புதியதாக பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிவேக வளர்ச்சியை எட்டி இருப்பதாகவும் கடந்த வாரத்தில் மட்டும் உயிர்கள் இறப்பின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்திருப்பதாகவும் கூறினார். உலகளவில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை கடந்து இருக்கும் நிலையில் இத்தாலியில் மட்டும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டு 12,430 பேர் பலியாகி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளார். அடுத்து வரும் சில நாட்களில் கொரோனாவால் இறப்போரின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரிக்கும் என்றும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 10 லட்சமாக உயரும் எனவும் எச்சரித்துள்ளார்.
இதுவரையில் நோய்த்தொற்று குறைவாக இருக்கும் நாடுகளாக கண்டறியப்பட்டுள்ள ஆப்பிரிக்கா, மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் கொரோனாவால் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளை காணலாம் என்று கூறியிருக்கும் அவர் நெருக்கடியின்போது பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு மற்றும் மற்றும் பிற வாழ்வாதாரத் தேவைகள் அனைத்தையும் உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.