ஆயிரம் ஆயிரமாக அதிகரிக்கும் கொடூர கொரோனா பலி..! உலகளவில் 38,000ஐ நெருங்கியது..!
உலக அளவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 ஆக இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 814 உயர்ந்து இருக்கிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீன நாட்டின் மத்திய நகரமான வுகானில் உருவான கொடூர கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் தற்போது கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. சீனாவில் கொரோனா நோய் தற்போது கட்டுக்குள் வந்து அங்கு இயல்பு நிலை திரும்பி இருக்கும் நிலையில் உலகின் மற்ற நாடுகளில் எண்ணிப்பார்க்க முடியாத விளைவுகளை கொரோனா வைரஸ் உண்டாகி வருகிறது. இத்தாலி, ஈரான், அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இந்தியா என உலகின் 200 நாடுகளில் மெல்ல மெல்ல கால்பதித்த கொரோனா வைரஸ் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இன்றைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 ஆக இருக்கும் நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 814 உயர்ந்து இருக்கிறது. கொரோனா பலி எண்ணிக்கை 38 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருப்பதால் உலக நாடுகள் அச்சமடைந்துள்ளன. இத்தாலியில் கொரோனா வைரஸ் தற்போது உச்சகட்டத்தை அடைந்து இருக்கிறது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து 1 லட்சத்து ஆயிரத்து 739 ஆக உயர்ந்திருக்கிறது நேற்று ஒரே நாளில் 812 பேர் பலியாகினர். மொத்தமாக நாட்டில் இதுவரையில் 11 ஆயிரத்து 591 பேர் உயிரிழந்துள்ளனர். கட்டுக்கடங்காமல் தலைவிரித்தாடும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த இத்தாலியும் நிலைகுலைந்து போயிருக்கிறது.
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவுக்கு 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.அடுத்து வரும் இரு வாரங்களில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அதிபர் ட்ரம்ப் அச்சம் தெரிவித்துள்ளார்.