26 ஆயிரம் உயிர்களை காவு வாங்கி கோர தாண்டவமாடும் கொரோனா..! நாளுக்கு நாள் எகிறும் பலி எண்ணிக்கை..!
உலகம் முழுவதும் 5 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 26 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3,292 பேரை காவு வாங்கியது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின்,ஈரான், அமெரிக்கா,பிரான்ஸ், இந்தியா என உலகின் 198 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.
சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் கொரோனா வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 969 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். மொத்தமாக அந்நாட்டில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 134 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியை தொடர்ந்து ஸ்பெயினில்4 ஆயிரத்து 934 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் அங்கு 569 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்சிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அங்கு 32 ஆயிரத்து 964 பேருக்கு வைரஸ் பரவியுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 299 பேர் பலியாகினர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 995 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் 2,378 பேரும், அமெரிக்காவில் 1,321 பேரும் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் 5 லட்சத்து 79 ஆயிரத்து 892 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் இதுவரை 26 ஆயிரத்து 518 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 748 ஆக உயர்ந்து 19 பேர் பலியாகி இருக்கின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது.