கொரோனாவால் பாதிக்கப்பட்டு சீரியஸாக இருந்த இங்கிலாந்து பிரதமர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நிலை படுமோசமான நிலையில் ஐசியூவில் சிகிச்சை பெற்றுவந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உடல்நிலை தேறியதையடுத்து அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார்.
சீனாவில் உருவான கொரோனா உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவி பேரழிவுகளை ஏற்படுத்திவருகிறது. சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரட்சமின்றி தாக்கிய கொரோனா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்துள்ளது.
இங்கிலாந்து இளவரசர், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா பிரதமரின் மனைவி, ஃபிரான்ஸ் அமைச்சர் என பல சர்வதேச தலைவர்களை தாக்கியது கொரோனா. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்(55), கடந்த சில தினங்களுக்கு முன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் கொரோனாவின் தாக்கம் அதிகமானதையடுத்து லண்டன் செயிண்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு மறுநாளே(ஏப்ரல் 7) அவரது நிலை மோசமானதையடுத்து, ஐசியூவிற்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் இரவு பகலாக சிகிச்சை அளித்தனர். இதையடுத்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் உடல்நிலை தேறியதையடுத்து, ஐசியூவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட போரிஸ் ஜான்சன், உடல்நிலை முழுவதுமாக தேறியதையடுத்து இன்று டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்றார்.
ஆனால் அவர் எந்த பணிகளையும் செய்யாமல் தனிமைப்படுத்தி ஓய்வெடுக்குமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.