மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் விஜய் மல்லையா கைது செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில் ஒரு மணி நேரத்திலேயே அவர் ஜாமீனில் வெளிவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளில் சுமார் 1800 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார். வங்கியில் பெற்ற கடனை ஈடு செய்ய அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு ஏலம் விடப்பட்டு வருகிறது. அவரை கைது செய்து இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

விஜய்மல்லையாவை கைது செய்ய உதவும் படி இன்டர்போலுக்கும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. இந்தச் சூழலில் லண்டனில் வைத்து இன்டர்போல் போலீசாரால் மல்லையா இன்று  செய்யப்பட்டார். மத்திய அரசின் தொடர் முயற்சியாலேயே மல்லையா கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில்  ஈடுபட்டு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக கைது செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே மல்லையா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே இவ்விவகாரம் குறித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜ்வாலா, ஒரு மணி நேரத்தில் மல்லையா ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். எனவே கைது செய்யப்பட்டதை பெரிய சாதனையாக பேசி நாட்டு மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.