Colombia mudslide flooding kill 254 in midnight deluge

கொலம்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254 ஆக அதிகரித்துள்ளது.


தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழை மற்றும் வெள்ளத்தால் மலைப்பகுதியில் இருந்த பாறைகள், மரங்கள் சீட்டுக்கட்டைப் போல சரிந்து குடியிருப்பு பகுதிகள் மீது விழுந்ததன. 

நூற்றுக்கும் அதிகமான வீடுகள் மண்ணில் புதைந்தன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். தோண்டத் தோண்ட மனித உடல்கள் குவியல் குவியலாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது.


தற்போதைய நிலவரப்படி 254 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 400க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளதால் பலியானோர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


அர்மெரோ துயரம்


மலைகள் சூழ்ந்த கொலம்பிய தேசத்தில் இயற்கைப் பேரழிவால் மக்கள் மாண்டு போவது இது முதல் முறை அல்ல. 1985 ஆம் ஆண்டு அர்மெரோவில் உள்ள எரிமலை வெடித்துச் சிதற இருப்பதாக விஞ்ஞானிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அப்பகுதியில் வாழும் மக்களை வேறு இடத்திற்கு குடியமர்த்துமாறும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதனை அரசு அப்போது சட்டை செய்யவில்லை..


சரியாக ஒரு மாத இடைவெளி, 1985 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி நடந்தது அந்த மாபெரும் இயற்கை பேரழிவு.. கொந்தளித்துக் கொண்டிருந்த தோலிமா எரிமலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதன் காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. ஆனால் இது குறித்து அறிந்திராத மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

விண்ணில் இருந்து சீறி வந்த நெருப்பு ஜூவாலை ஆயிரக்கணக்கான மக்களை பொசுக்கி போட்டது. பயங்கர வேகத்துடன் சறுக்கி வந்த மண் தன் பங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை காவு வாங்கியது. 


இவை அனைத்தும் ஒரு நிமிடத்திலேயே அரங்கேறின. உலகின் மிக மோசமான இயற்கை பேரிடரில் ஒன்றான அர்மெரோ துயரத்தில் 20 ஆயிரம் மக்கள் உயிரிழந்தனர்.