சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 தொழிலாளர்கள் பலியானார்கள்.
தென்மேற்கு சீனாவின் லாய்சு நகரில் தனியாருக்கு சொந்தமான மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தின் உள்பகுதியில் 35 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இதில், சிக்கி கொண்ட தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளேயே தவித்தனர். நுழைவாயிலின் அருகில் இருந்த 2 பேர் மட்டும் உடனடியாக வெளியேறினர்.
தகவலறிந்து தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 15 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், 18 தொழிலாளர்களை காணவில்லை. அவர்கள் சுரங்கத்தில் எந்த பகுதியில் சிக்கியிருக்கிறார்கள் என்று சுரங்க நிபுணர்கள் தேடி வருகிறார்கள்.
இந்த விபத்தை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள அனைத்து சுரங்கங்களிலும் நிலக்கரி உற்பத்தியை நிறுத்தும்படி நகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலகிலேயே அதிக அளவில் நிலக்கரி உற்பத்தி செய்யும் சீனாவில், நிலக்கரி சுரங்க விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18 பேரும், மார்ச் மாதம் 19 பேரும் சுரங்க விபத்துகளில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
