கடுமையான காலநிலை மாற்றங்கள்.. அதிக காட்டுத் தீக்களை எதிர்கொள்ள நேரிடலாம் - பகீர் தரும் ஆராய்ச்சியின் முடிவு!
Effects of Climate Change : பருவநிலை மாற்றம் காரணமாக காட்டுத்தீ அபாயம் அதிகரிக்கும் என்றும், மேலும் தீ பரவும் காலங்கள் நீடிக்கும் என்றும் ஒரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
உலக அளவில் காட்டுத்தீ என்பது நாட்டில் ஏற்படும் மிகவும் அழிவுகரமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும். இது மனித மற்றும் பிற ஜீவராசிகளின் உயிர்களை அச்சுறுத்துகிறது. வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை அழிக்கிறது மற்றும் பெரிய அளவில் காற்று மாசுபாட்டை உருவாக்குகிறது காட்டுத்தீ என்றால் அது மிகையல்ல.
இந்த சூழ்நிலையில் கணிக்க முடியாததாக மாறிவரும் காலநிலை மாற்றத்தால் குளிர்காலத்திலும் பெரிய அளவில் காட்டுத் தீ விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த காலநிலை மாற்றத்தால் பூமியின் நிலப்பரப்பில் பலவிதமான மாறுபாடுகள் ஏற்படும் என்றும் அமெரிக்காவின் நிவாடா நகரத்தை சேர்ந்த அறிவியலாளர் ஒருவர் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் ஜப்பானிய கடற்கரை! அணுக்கழிவைக் கொட்டியது காரணமா?
எர்த்'ஸ் ஃபியூச்சர் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், 1984 மற்றும் 2019 க்கு இடையில் காட்டுத்தீயின் அபாயத்தைக் கணிக்கவும் நிர்வகிக்கவும் வட அமெரிக்கா முழுவதும் பயன்படுத்தப்படும் நான்கு தீ ஆபத்துக் குறியீடுகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தார். பின்னர், திட்டமிடப்பட்ட எதிர்கால காலநிலையின் கீழ் காட்டுத்தீ ஆபத்து எவ்வாறு மாறியது என்பதை அவர்கள் ஆய்வு செய்தனர்.
இதன் மூலம் தான் காலநிலை மாற்றத்தால் காட்டு தீயின் தாக்கம் இனி வரும் காலங்களில் அதிகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். காட்டுத்தீ ஆபத்து அதிகமாக இருக்கும் போது, காட்டுத்தீயின் அளவு பெரியதாக இருக்கும் என்றும், பெரிய பகுதிகளில் இந்த பாதிப்பு வலுவாக இருப்பதாகவும் அவர்கள் கண்டறிந்தனர்.
எதிர்கால காலநிலை கணிப்புகளில், தீ ஆபத்துக் குறியீடுகளை இணைப்பதன் மூலம், இந்த நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்க கண்டம் முழுவதும் தீவிர காட்டுத்தீ ஆபத்து சராசரியாக 10 நாட்கள் அதிகரிக்கும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது, இது பெரும்பாலும் அதிகரித்த வெப்பநிலையால் தான் ஏற்படுகிறது என்பது நினைவுகூரத்தக்கது.
தென்மேற்கில், தீவிர காட்டுத்தீ பரவும் பருவமானது ஆண்டுக்கு 20 நாட்களுக்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் பெரும்பாலானவை வசந்த மற்றும் கோடை மாதங்களில் ஏற்படும். குறிப்பாக டெக்சாஸ்-லூசியானா கடலோர சமவெளிக்கு, குளிர்கால மாதங்களில் இந்த காட்டுத்தீ விபத்துகள் ஏற்படலாம்.