சிரியாவில் அசாத் வீழ்ச்சிக்குப் பின், இரண்டு நாட்களில் நடந்த வன்முறையில் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அலவைட் சமூகத்தினர் குறிவைக்கப்படுவதால் அச்சத்தில் உள்ளனர். பிரான்ஸ் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியா பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது, அந்நாட்டில் இரண்டு நாட்களில் நடந்த வன்முறையில் 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினருக்கும் அசாத் ஆதரவாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் இந்தப் பேரழிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக அசாத்தின் ஆட்சிக்கு முதுகெலும்பாக அமைந்த அலவைட் சமூகத்திற்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
சிரியாவின் கடந்த 14 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் மிகவும் கொடிய துயரங்களில் ஒன்றாக மாறியுள்ள இந்த வன்முறை, அந்நாட்டு மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தைத் தூண்டியுள்ளது. அசாத்தின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய மூன்று மாதங்களுக்குப் பிறகு சென்ற வியாழக்கிழமை பெரிய வன்முறை வெடித்தது. அசாத்தின் ஆதரவு படைகளின் எஞ்சிய பகுதியைக் குறிவைத்து தாக்குதல் தொடங்கியதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.
வன்முறை தொடங்கியது எப்படி?:
ஜப்லே அருகே சந்தேகத்திற்குரிய நபர் ஒவரை அரசாங்கப் படைகள் கைது செய்ய முயன்றபோது மோதல்கள் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. அசாத் ஆதரவாளர்கள் அவர்களைப் பதுங்கியிருந்து தாக்கியுள்ளனர். இதனால், அவலைட்டுகள் அதிகம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளன.
அசாத்தின் கீழ், அலவைட்டுகள் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தினர். இப்போது, புதிய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், அசாத்தின் ஆதரவாளர்களான அவலைட்டுகள் குறிவைக்கப்படுகிறார்கள். இதனிடையே, பிரான்ஸ் சிரியாவின் உள்நாட்டு வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. உரிய விசாரணை நடத்தவும் வலியுறுத்தியுள்ளது.
போர்க்காலச் சூழலில் இந்தியா-ரஷ்யா போட்ட டீல்.. இந்திய இராணுவமே மாறப்போகுது!
உயிர் பயத்தில் அவலைட்டுகள்:
சன்னி மற்றும் அலவைட் சமூகங்களுக்கு இடையே பழிவாங்கும் வெறி ஏற்பட்டுள்ளதால் நெருக்கடியை மேலும் கவலை அளிப்பதாக மாறியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாத்துக்கு ஆதரவான அலவைட்களைக் குறிவைத்து கொலை, கொள்ளை மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் நடக்கின்றன.
துப்பாக்கி ஏந்திய சன்னி சமூகத்தினர் அலவைட்களை தெருக்களலும் வீடுபுகுந்தும் சுட்டுக் கொல்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான அவலைட் சமூகத்தினர் உயிருக்கு அஞ்சி மலைப்பகுதிகளுக்குத் தப்பி ஓடியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தெருக்களில் கிடக்கும் சடலங்கள்:
கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான பனியாஸில், இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் தெருக்களில் கிடப்பட்டதாகவும், யாரும் அவற்றை மீட்டு அடக்கம் செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. 57 வயதான அலி ஷெஹா, தனது பக்கத்து வீடுகளில் இருந்த குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும், கடைகள் மற்றும் வீடுகளில் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்கின்றனர் என்றும் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். துப்பாக்கி ஏந்திய நபர்கள் வீடுகளில் தீடீரென நுழைந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பதாகவும் அலவைட் சமூகத்தினர் கண்ணீருடன் தெரிவிக்கின்றனர்.
சனிக்கிழமை முதல் கொலைகள் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இரண்டு நாளில் ஏற்பட்ட பேரழிவின் பாதிப்பு இன்னும் நீங்கவில்லை. சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்துர்ரஹ்மான், இது சிரிய வரலாற்றில் மிகப்பெரிய படுகொலைகளில் ஒன்று என்கிறார். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், இறப்பு எண்ணிக்கை 600க்கும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், பின்னர் வந்த தகவல்கள் பலி எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று சொல்கின்றன.
உலகின் மிகப் பழமையான விண்கல் பள்ளம் கண்டுபிடிப்பு! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்!
லெபனானில் தஞ்சம்:
அல்-ஜனூடியாவில் நான்கு சிரிய பாதுகாப்புப் படை வீரர்களின் இறுதிச் சடங்கு நடைபெற்றது, இதில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையில், மேலும் வன்முறையைத் தடுக்க கடலோரப் பகுதிக்கான சாலைகள் மூடப்பட்டன. முக்கிய பகுதிகளை அரசாங்கப் படைகள் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளன என சிரியாவின் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய சிரியாவில் உள்ள கிராமமான துவாய்மில், வன்முறையில் இறந்த 9 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 31 பேர் அடக்கம் செய்யப்பட்டனர். லெபனான் சட்டமன்ற உறுப்பினர் ஹைதர் நாசர், சிரிய அகதிகள் லெபனானுக்கு வருவதாகவும், பலர் ஹ்மெய்மிமில் உள்ள ரஷ்ய விமானத் தளத்தில் தஞ்சம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார். சிரியாவில் அலவைட்டுகள் வேலைகளில் இருந்து நீக்கப்படுவதாகவும், முன்னாள் வீரர்கள் தூக்கிலிடப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பழிவாங்கும் வன்முறை:
ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான புதிய அரசுக்கு அல்-கொய்தாவுடன் கடந்த காலத்தில் தொடர்புகள் இருந்தபோதிலும், மத மற்றும் இன சிறுபான்மையினரைப் பாதுகாப்பதாக உறுதியளித்துள்ளது. ஆனால், பழிவாங்கும் நடவடிக்கை குறித்த அச்சம் அதிகமாகவே உள்ளன. அலவைட்டுகள் பாதுகாப்பின்மையை உணர்கிறார்கள்.
சமூக ஊடகப் பதிவுகள் சாமானிய மக்கள் கொலை செய்யப்படுவதை உறுதிசெய்யும் ஆவணங்களாக உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டது பற்றி சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கின்றனர். ஆயுதமேந்திய நபர்கள் பொதுமக்களைக் கொலை செய்யும் காட்சியை சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது.
உலகில் மிகவும் பாதுகாப்பான இடங்கள் இவைதான்! 3ம் உலகப்போர் வந்தால் கூட ஆபத்தில்லை!
