இந்தியர் என்று நினைத்து இனவெறியோடு திட்டிய டிரைவர்.. வைரலான வீடியோ - ஓட்டுநருக்கு தண்டனை கொடுத்த சிங்கப்பூர்!
Singapore Taxi Driver : சிங்கப்பூரில் பல இன மக்கள் ஒன்றாக இணைந்து வாழ்ந்து வந்தாலும், வெகு சில இடங்களில் பிறநாட்டவருக்கு எதிராக இன ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.
அந்த வகையில் தான் பயணம் செய்யும் இடம் குறித்து, டாக்ஸி ஓட்டுனருக்கு தவறான தகவல் கொடுத்தார் என்றும், மேலும் தன் காரில் ஏறிய அந்த பெண்மணி ஒரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று நினைத்தும், டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் அவரிடம் கடுமையாக நடந்துகொண்ட சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் அரங்கேறியது.
"நீங்கள் இந்தியர்.. நான் சீன நாட்டவன்.. நீங்கள் ஒரு முட்டாள்".. என்று அந்த டாக்ஸி ஓட்டுநர் தன் வாகனத்தில் ஏறிய பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் 46 வயதான யூரேசிய வம்சாவளியைச் சேர்ந்த ஜனெல்லே ஹோடன் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவத்தன்று அந்த பெண் தனது ஒன்பது வயது மகளுடன் அந்த டாக்சியில் பயணம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட அந்த பெண்மணி, சம்பத்தன்று மதியம் 2 மணியளவில் Tada என்ற டாக்சி செயலியை பயன்படுத்தி முன்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் அவர்கள் பாசிர் ரிஸ் ஹவுசிங் எஸ்டேட்டின் அருகே சவாரி செய்யும் போது, அங்கு வரவிருக்கும் மெட்ரோவிற்கான, எம்ஆர்டி பாதையின் கட்டுமானப் பணியின் காரணமாக சாலையின் ஒரு பகுதி தடைபட்டதால், திடீரென அந்த ஓட்டுநர் பின்னால் இருந்த பயணிகள் மீது கோபம்கொண்டுள்ளர்.
மேலும் அந்த பெண் தவறான முகவரியை கொடுத்துள்ளார் என்று கூறி அவர்களை நோக்கி கத்த துவங்கியுள்ளார். இன ரீதியாக திட்டிய அந்த ஓட்டுநர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது குறிப்பிட்ட அந்த டாக்ஸி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த ஓட்டுனருக்கு இப்பொது சுமார் 3000 சிங்கப்பூர் டாலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.