கொரோனாவை ஏவி சீனா ராஜதந்திர அழிச்சாட்டியம்... ஒட்டுமொத்தமாய் இந்தியா மீது குவியும் உலகத்தின் கடைக்கண் பார்வை
பிற நாடுகளின் நிறுவனங்களை வாங்கத்துடிக்கும் சீனாவில் இருந்து மொத்தமாக 1000 நிறுவனங்கள் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி அந்நாட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிற நாடுகளின் நிறுவனங்களை வாங்கத்துடிக்கும் சீனாவில் இருந்து மொத்தமாக 1000 நிறுவனங்கள் வெளியேற இருப்பதாக தகவல்கள் வெளியாகி அந்நாட்டுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து சீனாவை குற்றஞ்சாட்டி வருகிறது. தொடக்கத்தில் இந்த குற்றச்சாட்டுகள் அர்த்தமில்லாதவையாக இருப்பினும் தற்போது அமெரிக்காவின் குற்றச்சாட்டு உண்மையாக இருக்குமோ? என்ற எண்ணம் பிற நாடுகளுக்கும் எழ ஆரம்பித்து இருக்கிறது. உலக நாடுகள் கொரோனாவால் நிலைகுலைந்து போய் கிடக்க, முதலில் கொரோனா தோன்றிய சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
அங்கு பலி எண்ணிக்கை வெறும் 4 ஆயிரம் என்றளவில் இருக்கிறது. அதேசமயம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் நாடுகளில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்த நாடுகள் தற்போது பொருளாதார ரீதியாக மிகுந்த பின்னடைவை சந்தித்து வருகின்றன. மறுபுறம் மாஸ்க், கிளவுஸ், வெண்டிலேட்டர் என ஏராளமான பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சீனா பெருத்த லாபம் ஈட்டி வருகிறது.
இந்நிலையில் உலக நாடுகளின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பிற நாட்டு நிறுவனங்களில் சீனா அதிக முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் ஆடிப்போன பல உலக நாடுகள் தங்களது நாட்டில் அந்நிய முதலீடுகளுக்கான விதிகளை கடுமையாக்கி வருகின்றன. இத்தாலி, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது நாட்டு நிறுவனங்களை சீனாவிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தங்களது நாட்டில் உள்ள விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கின்றன.
அந்தப் பட்டியலில் சமீபமாக இந்தியாவும் இணைந்துள்ளது. அதன்படி இந்தியாவுடன் எல்லையை பகிரும் எந்த நாடாக இருந்தாலும், இனி மத்திய அரசிடம் அனுமதி வாங்கிய பின்தான் இந்தியாவில் முதலீடு செய்ய முடியும் என்று அறிவித்தது. இந்தியாவில் உள்ள நிறுவனங்களை சீனா வாங்குவதை, முதலீடு செய்வதை தடுக்கும் வகையில் இந்தியா இந்த சட்டத்தை கொண்டு வந்தது. இதைப்பார்த்த சீனா உலக வர்த்தக மையம் விதித்து இருக்கும் விதிகளுக்கு இது எதிரானது என இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக மக்கள் தொகையில் மிகப்பெரிய நாடாக இருப்பதால் உலக நாடுகள் சீனாவுடனான பொருளாதார உறவை துண்டித்துக் கொண்டால், அது இந்தியாவுக்கு பொருளாதாரரீதியாக மிகுந்த பயனளிக்கும். இதனால் தான் இந்திய நாட்டில் முதலீடு செய்ய சீனா மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. கொரோனாவை பயன்படுத்தி பிற நாடுகளில் உள்ள நிறுவனங்களின் மீது முதலீடு செய்து உலக நாடுகளை சீனா கட்டுக்குள் கொண்டுவர முயற்சிப்பதாக உலக நாடுகள் பலவும் குற்றஞ்சாட்ட தொடங்கியிருக்கின்றன. இதுதான் சீனாவின் ராஜதந்திர முயற்சியாக பார்க்கப்படுகிறது.
தற்போது சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து இருப்பதால் இது பொருளாதார ரீதியான போராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்களது நாட்டில் தோன்றிய கொரோனாவை கட்டுப்படுத்தாமல் உலக நாடுகளுக்கு பரவவிட்டு, தற்போது அதை வைத்து சீனா பெருத்த லாபம் சம்பாதிக்க ஆரம்பித்து இருப்பதாக பல்வேறு தரப்பிலும் புகார்கள் எழுந்துள்ளது.பிற நாடுகளுக்கு சீனா ஏற்றுமதி செய்யும் பொருட்கள் தரமற்றவையாக இருப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மொத்தத்தில் இந்த கொரோனாவை வைத்து சீனா உலக நாடுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வது தற்போது வெட்டவெளிச்சமாகி உள்ளது.