சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் வைரஸ் தொற்று உள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது .  வைரஸ் தொற்று உள்ள கரன்சி நோட்டுகள் கொரானா வைரஸ் வேகமாக பரவ ஒரு காரணமாக இருப்பதாக தெரியவந்ததையடுத்து  இந் நடவடிக்கையை  சீன மத்திய வங்கி எடுக்க முடிவு செய்துள்ளது . சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் சீனாவில்  வேகமாக பரவி வருகிறது .  இதுவரை 2007 பேர் இந்த வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் . 72 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது . 

இந்த வைரஸை கட்டுப்படுத்த இதுவரையில் மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை ,  ஆகவே வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது .  24 மணி நேரமும் மக்களின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர் .  ஆனால் இதில் மருத்துவர்களும் உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .  வைரஸை கட்டுப்படுத்த சீனா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் எதிலும் பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை ,  இந்நிலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுவீடாகச் சென்று மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது . கொரோனா வைரஸ் பாதிப்பினால் நோயாளி தும்மினாலோ இருமினாலோ அதனால் வெளியாகும் நுண் எச்சில் நீர் துகள்கள் வழியாக கொரோனா பரவ வாய்ப்புள்ளது . 

இதனால் நுண் எச்சில் துகள்கள் படிந்த கரன்சி நோட்டுகள் மூலமாகவும் வைரஸ் பரவ வாய்ப்புள்ளது . எனவே மருத்துவமனைகள்,  ஷாப்பிங் மால்கள் பேருந்துகள் போன்றவற்றில் கிடைக்கும்  கரன்சி நோட்டுகளை அழிக்க சீன மத்திய வங்கி முடிவு செய்துள்ளது . இந்நிலையில் வைரஸ் தொற்று பாதிப்புள்ள பகுதிகளில்  வங்கிக்கு வரும் நோட்டுகளை 14 நாட்கள்  அல்ட்ரா வைலட் கதிர்கள் மற்றும் அதிக வெப்பத்தில் வைத்து இந் நோட்டுகளை அழிக்க அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.