போருக்கு தயார் ஆகுங்கள்..!! ரத்த வெறிபிடித்த அதிபர் ஜி ஜின் பிங் சீன ராணுவத்திற்கு உத்தரவு..!!
அனைத்து வகையான சிக்கலான சூழ்நிலைகளையும் உடனடியாகவும் திறம்படவும் கையாளவும், தேசிய இறையாண்மையை உறுதியுடன் நின்று பாதுகாக்கவும், அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்,
சீனா அதிபர் ஜி ஜின்பிங் போருக்கு தயாராக இருக்கும்படி தங்கள் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, நாட்டின் இறையாண்மையை உறுதியாக நின்று பாதுகாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. உலகமே கொரோனாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா கொரோனாவுடனும், சீனா, பாகிஸ்தான் போன்ற எதிரிகளிடமிருந்தும் நாட்டைக் பாதுகாக்க போராடிக் கொண்டிருக்கிறது . உலகமே கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், தன் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை திசைதிருப்ப சீனா இந்தியா மீது போர் என்ற கொடூர அரசியலை முன்னெடுத்துள்ளது. கடந்த மே -5 மற்றும் 6 ஆம் தேதிகளில் இந்திய சீன எல்லையான பாங்கொங் த்சோ ஏரிப் பகுதியில் இந்திய சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது . அதைத்தொடர்ந்து மே-9ம் தேதி அன்று சிக்கிமின் நகுலா-பாஸ் எல்லை அருகே இரு நாட்டு வீரர்களும் நேருக்குநேர் மோதிக் கொண்டனர்.
இது இந்தியா- சீனா இடையே அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியது, இதைத்தொடர்ந்து மே-22ஆம் தேதி இந்திய-சீன எல்லையான அக்சய் சின் பிராந்தியத்திலுள்ள உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா, சீனா எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்ததாகவும் , சட்டவிரோதமாக கூடாரங்களை அமைத்ததாகவும் குற்றம்சாட்டியதுடன் அங்கு ஏராளமான படைகளை குவிக்கத் தொடங்கியது, இந்நிலையில் கடந்த இரண்டு வார காலமாக எல்லையில் ஏராளமான படைகளையும், போர் தளவாடங்களையும் சீனா குவித்து வருகிறது. இதனால் இந்தியாவும் பதிலுக்கு தன் ராணுவத்தை எல்லையில் குவிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் சீனா போருக்கு தயாராகி விட்டது என்பதை உறுதி செய்வதற்கான தகவல்கள் வரத்தொடங்கியுள்ளன. இத்தனை நாட்கள் இந்திய-சீன விவகாரத்தில் கள்ள மௌனம் சாதித்து வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவுடன் போருக்கு தயார் ஆகும்படி தங்கள் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் சீனாவின் பொதுச் செயலாளராகவும், வாழ்நாள் முழுவதும் ஆட்சியில் இருக்கும் வாய்ப்பை கொண்ட அதிபரும், சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான ராணுவத்தின் தலைவராகவும் இருக்கும் அதிபர் ஜி ஜின்பிங், சீன உயர்மட்ட பிரதிநிதிகளின் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார், மக்கள் விடுதலை ராணுவம், ஆயுத போலீஸ் படையின் உயர் அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர். அதில் பேசிய அவர், சீன ராணுவம் போருக்கு தயாராகும் படி உத்தரவிட்டதுடன், தற்போது சீனாவுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலைமை குறித்தும் விவரித்துள்ளார். மேலும் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலைகளை பற்றி ராணுவம் சிந்திக்கவும், பயிற்சி மற்றும் போர் தயார் நிலையை அளவிடவும், அனைத்து வகையான சிக்கலான சூழ்நிலைகளையும் உடனடியாகவும் திறம்படவும் கையாளவும், தேசிய இறையாண்மையை உறுதியுடன் நின்று பாதுகாக்கவும், அதிபர் ஜி ஜின்பிங் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார், என்று சீன மக்கள் கம்யூனிஸ்ட் நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய சீன எல்லையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பதற்றம் நீடித்து வரும் நிலையில், அதிபர் ஜி ஜின்பிங் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். அதே நேரத்தில், இந்திய பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் , முப்படைத் தலைவர் பிபின் ராவத் மற்றும் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம் நாரவனே மற்றும் முப்டைதளபதிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லை நிலவரங்கள் குறித்து விசாரித்ததுடன் எல்லையில் எந்தெந்த இடங்களில் படைகளை நிலை நிறுத்த வேண்டும் என இராணுவத் தளபதியிடம் விசாரித்ததாகவும், சீனா ஆக்கிரமிப்புக்கு இந்திய ராணுவம் எடுக்கும் பதில் நடவடிக்கைகளுக்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்திருப்பதாகவும் ராஜ்நாத்சிங் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.