கற்பனை செய்யமுடியாத அளவிற்கு விஷ்வரூபம் எடுத்த இந்திய ராணுவம்..!! தலை சுற்றிப்போன சீனா..!!
சீனாவுக்கு எதிரான ஒரு நீண்ட போருக்கு இந்திய ராணுவம் கடந்த சில ஆண்டுகளாகவே தயாராகிவருவதுடன் மேற்கு வங்கத்தின் பனகரில் ஒரு மலைபிரதேச அதிவிரைவுப்படையை உருவாக்கி வருகிறது.
லடாக் அருகே உண்மையான எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக, இந்திய- சீன ராணுவத்திற்கிடையே பதற்றம் நீடித்துவருகிறது. இரு நாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னரும் பல இடங்களில் பதற்றம் தணியவில்லை. இத்தகைய சூழ்நிலையில், சீனா ஏன் இந்தியாவை இந்த அளவிற்கு எதிர்க்கிறது, அது ஏன் இந்தியாவுக்கு எதிராக ஒரு யுத்தம் நடத்தும் அளவுக்கு துணிகிறது என அனைவர் மனதிலும் கேள்வி எழாமல் இல்லை.. இதற்கு விடை காணவேண்டும் என்றால் சீனாவுடன் 1962 போரில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர் இந்தியா தன்னை பலம் பொருந்திய நாடாக தகவமைத்துக் கொண்ட வரலாற்றை உற்று நோக்க வேண்டியிருக்கிறது. மொத்தத்தில் இந்த பதற்றம் டோக்லாம் சர்ச்சையிலிருந்து தொடங்கியது. கடந்த 2017 ஆம் ஆண்டில், பூட்டானை ஒட்டியுள்ள சர்ச்சைக்குரிய டோக்லாமில் சீனா ஒரு சாலையை உருவாக்க முயன்றது. இந்த விவகாரம் சீனா மற்றும் பூட்டானுக்கிடையே கடந்த ஆண்டுகளில் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்தியாவின் சிக்கிம் எல்லையையொட்டி அந்த சாலையை அமைக்க சீனா விரும்பியது. ஆனால் இந்த சாலை நிர்மாணிக்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனக் கருதிய இந்திய இராணுவம், சீன இராணுவத்திற்கு சாலையை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், சீனா அத்திட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டியிருந்தது.
இந்தியாவின் எல்லைக்கு சாலை அமைக்க முடியவில்லை என்ற கோபம் ஒரு பக்கம் இருக்க, பூட்டானை பாதுகாப்பதாக இந்தியா- பூட்டான் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் சீனாவை கொந்தளிப்படைய வைத்தது. ஒருவழியாக டோக்லாம் தகராறிலிருந்து சீனா பின்வாங்கியதாக சர்வதேச அரசியல் வல்லுநர்கள் அப்போது நம்பினர், ஆனால் (பூடான்-சீனா) இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் இந்தியா குறுக்கிட்டதை சீனாவால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. குறுக்கிட்டது மட்டுமல்லாமல், சீனா போன்ற ஒரு வல்லரசையே பின்வாங்க இந்தியா கட்டாயப்படுத்தியதை அதனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில் சீனா இதற்காக இந்தியாவை பழிவாங்கும் என்று அப்போதிலிருந்தே யூகிக்கப்பட்டன. ஆனால் கொரோனா நோய்த் தொற்றுக்கு மத்தியில் அது இத்தகைய தந்திரத்தை செய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இரண்டாவது காரணம் என்னவென்றால், 370-வது சட்டப்பிரிவை நீக்கியதுடன், ஜம்மு-காஷ்மீரை லடாக்கிலிருந்து பிரித்தது மற்றும் லடாக், அக்சாய்-சின் தனி யூனியன் பிரதேசம் என நாடாளுமன்றத்தில் இந்தியா பிரகடனம் செய்தது சீனாவை அதிர்ச்சியடைய வைத்தது,குறிப்பாக அக்சாய்-சின் பகுதியை மீட்டேதீருவோம் என அமித்ஷா சூளுரைத்தது சீனாவுக்கு மிளகாய் கிள்ளிவைத்ததுபோல் எரிச்சலை ஏற்படுத்தியது. ஆயினும் அப்போது சீனா எந்த உடனடி நடவடிக்கையிலும் இறங்கவில்லை.
அதே நேரத்தில், சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ் இந்தியாவின் இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தது. அத்தகைய சூழ்நிலையில், சீனாவின் அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்று அப்போதே பல யூகங்கள் எழுந்தன. இந்தியா தன் எல்லையை வலுப்படுத்தும் நோக்கத்தில் எல்லைப் பகுதிகளில் உருவாக்கியுள்ள சாலைகட்டமைப்பு வசதி, மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் சீனாவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் எல்லையை ஒருங்கிணைக்கும் 73 இணைப்புசாலைகள் இந்தியா பிரமிப்புட்டும் வகையில் அமைத்துள்ளது. இந்தியாவின் இந்த பிரம்மாண்ட ஏற்பாடு சீனாவை கலக்கமடையச் செய்துள்ளது. இந்த சாலைகளை நிர்மாணித்ததன் மூலம் இந்தியப்படையினரின் வேகம் பன்மடங்காக உயர்ந்துள்ளது. எந்த நேரத்திலும் எல்லைக்கு படைகள் விரைய முடியும், சீனா ராணுவ வீரர்களுக்கு இணையாக இந்திய வீரர்கள் இப்போது வாகனங்களில் ரோந்து செல்கின்றனர் என்பது சீனாவுக்கு உறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் சமீபத்தில் பாங்கொங் த்சோ ஏரிக்கு அருகில் சர்ச்சைக்குரிய விரல் பகுதியில் இருநாட்டு வீரர்களும் மோதிக்கொண்டபோது சீன வீரர்களின் கவச வாகனங்களை இந்திய வீரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. அவர்கள் அந்த வாகனத்தை விட்டு ஓடினர், இது சீனாவுக்கு தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லையில் இந்தியா தனது பாதுகாப்பு வசதியை மேம்படுத்தியுள்ளதுடன் ஏராளமான பதுங்குக் குழிகளையும், சாலை கட்டமைப்புகளையும் அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகில் மிக உயர்ந்த மலைப் பகுதிகளில் ஒன்றான லடாக்கில், உலகின் இரண்டாவது மிக உயர்ந்த சாலை, சாங்லா-பாஸிலிருந்து (சுமார் 17 ஆயிரம் அடி உயரம்) கடந்து, பாங்கோங்-த்சோ ஏரிக்கு மிக அருகில் ஏராளமான பீரங்கிகளையும், டேங்கர் படைப்பிரிவுகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது, பல ஆறுகள் மற்றும் நீரோடைகளை அந்த பிரங்கிகள் கடக்கும் வகையில் இந்தியா இரும்பு பாலங்களையும் அமைத்துள்ளது. இதை சீனாவால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. மலை உச்சிகளில் இந்தியா இதுவரை எங்கெங்கு டேங்கர் படைப்பிரிவுகளை நிறுத்தி இருக்கிறது என்பதை சீனாவால் விளங்கிக்கொள்ளமுடிவில்லை. வடக்கு சிக்கிமில் கவச படை பிரிவுகளை இந்தியா உருவாக்கியுள்ளது. எல்லையில் பல இடங்களில் தனது படை பிரிவுகளை இந்தியா அமைத்து வருகிறது. டேங்கர்கள் தவிர சீன எல்லையில் போஃபர்ஸ் பீரங்கிகளையும் இந்தியா நிறுத்தியுள்ளது.கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ள அல்ட்ரா-லைட் ஹோவிட்சர்கள், எம் -777 துப்பாக்கிகளை சீன எல்லையில் இந்தியா நிலை நிறுத்தியுள்ளது, இந்தியா படைகளை அதிவேகமாக இயந்திரமயமாக்கிவருகிறது, சீனாவுக்கு எதிரான ஒரு நீண்ட போருக்கு இந்திய ராணுவம் கடந்த சில ஆண்டுகளாகவே தயாராகிவருவதுடன் மேற்கு வங்கத்தின் பனகரில் ஒரு மலைபிரதேச அதிவிரைவுப்படையை உருவாக்கி வருகிறது.
இந்திய ராணுவத்தின் இந்த 17-ஆவது படைப்பிரிவு ஒரு பிரம்மாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது, போர் ஏற்பட்டால் இந்த படையின் முக்கிய நோக்கம் எதிரியின் நிலத்தைத் தாக்குவதாகும். இது மலைகளில் போராட தயாராக இருக்கும் ஒரு படைப்பிரிவு, இது திட்டமிட்டு சீனாவுக்கு எதிராக உருவாக்கப்பட்டு வருகிறது, 1962-ஆம் ஆண்டு போரில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட நாடு இன்று தனக்கு எதிராக சவால் விடுகிறது என்பதை சீனாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கடந்த 2019 செப்டம்பரில் லடாக்கில் இந்தியா நடத்திய போர் பயிற்சி சீனாவை பீதியடைய வைத்தது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் காட்டும் நெருக்கம் சீனாவை நிலைகுலைய வைத்துள்ளது. எனவே ஒரு புறம் பாகிஸ்தானை தூண்டிவிட்டு மறுபுறம் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதற்கான முயற்ச்சியே இது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.