உலக அளவில் காலரை தூக்கிவிட்டுக் கொள்ளும் சீனா... நாங்கதான் கெத்து... கொக்கரிக்கும் அதிபர் ஜி ஜின்பிங்..!
உலக வங்கியின் சர்வதேச வறுமைக் கோட்டின் படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை உலகளாவிய வறுமை நீக்கத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
கடந்த நாற்பது ஆண்டுகளில் 770 மில்லியன் மக்களை ஏழ்மையிலிருந்து வெளியேற்றுவதன் மூலம் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் சீனா ஒரு முழுமையான வெற்றியை அடைந்துள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்துள்ளார். இது நாடு உருவாக்கிய மற்றொரு அதிசயம் என்று வரலாற்றில் அழைக்கப்படும் என அவர் பெருமைப்பட்டுள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் வறுமை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. வறுமை ஒழிப்பில் நாட்டின் சாதனைகளை குறிக்கும் மற்றும் அதன் வறுமைக்கு எதிரான பணியில் ஈடுபட்ட நபர்களை கௌரவிப்பதற்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஜி ஜின்பிங் இதை அறிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், ‘’சீனாவின் மக்கள் தொகை சுமார் 1.4 பில்லியன். கிராமப்புறங்களில் உள்ள அனைத்து ஏழை மக்களும் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம், 2030 காலக்கெடுவைவிட 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே சீனா ஐ.நா. வறுமை ஒழிப்பு இலக்கை அடைந்துள்ளது.
கடந்த எட்டு ஆண்டுகளில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இறுதி 98.99 மில்லியன் வறிய கிராமப்புற மக்கள் அனைவரும் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 832 வறிய மாவட்டங்களும் 1,28,000 வறிய கிராமங்களும் வறுமை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. சீனாவில் தாராளமய சீர்திருத்தம் தொடங்கப்பட்டு 1970 -களின் பிற்பகுதியில் உலகமயமாக்கலுக்கு அனுமதி வழங்கப்பட்டதில் இருந்து, 770 மில்லியன் வறிய கிராமப்புற மக்கள் சீனாவின் தற்போதைய வறுமைக் கோட்டின் படி, தற்போது வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இதே காலகட்டத்தில் உலகளாவிய வறுமைக் குறைப்பில் 70 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சீனா வழங்கியுள்ளது. இத்தகைய சாதனைகள் மூலம், சீனா மற்றொரு வரலாற்று அதிசயத்தை உருவாக்கியுள்ளது. கடந்த எட்டு ஆண்டுகளில் வறுமை ஒழிப்புக்காக சீனா கிட்டத்தட்ட 1.6 டிரில்லியன் யுவான் (சுமார் 246 பில்லியன் அமெரிக்க டாலர்) நிதியை முதலீடு செய்துள்ளது.
உலக வங்கியின் சர்வதேச வறுமைக் கோட்டின் படி, கடந்த 40 ஆண்டுகளில் வறுமையிலிருந்து வெளியேற்றப்பட்ட சீன மக்களின் எண்ணிக்கை உலகளாவிய வறுமை நீக்கத்தில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. சீனாவின் வறுமையை முற்றிலுமாக ஒழிப்பதே ஜி ஜின்பிங் 2012’ஆம் ஆண்டின் இறுதியில் ஆட்சிக்கு வந்தபோது அறிவித்த முக்கிய குறிக்கோளாக இருந்தது. அந்த நேரத்தில், சீனாவில் சுமார் 100 மில்லியன் ஏழை மக்கள் இருந்தது’’என அவர் தெரிவித்துள்ளார்.