சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் இதுவரை 22 லட்சத்து 23 ஆயிரத்து 240 பேருக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 328 பேர் பலியாகியுள்ளனர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

இதற்கிடையில், சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வைரஸ் பரவத்தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட சீன அரசு வைரஸ் பரவும் வேகம் மற்றும் பலி எண்ணிக்கையை வெகுவாக குறைத்தது.

குறிப்பாக பிப்ரவரி மாதத்திற்கு பின் அந்நாட்டில் வைரசுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. மேலும், கடந்த சில நாட்களாக வைரஸ் தாக்குதலுக்கு எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்ற நிலைக்கு வந்தது. இதனால் நிம்மதி அடைந்த சீன அரசு ஹூபேய் மாகாணத்தில் ஊரடங்கை தளர்த்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டோம் என நினைத்துக்கொண்டிருந்த சீனாவுக்கு நேற்றிய நிலவரம் மரண அடி கொடுத்துள்ளது. வைரஸ் பரவத்தொடங்கிய நாளில் இருந்து இத்தனை நாட்களில் நேற்று தான் சீனா அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. அதாவது நேற்று மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்தும் வுகான் நகர் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி சீனாவில் 82 ஆயிரத்து 692 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் புதிதாக 351 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் கொரோனா தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளனர். இதனால் சீனாவில் வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 632 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கு முன்னதாக சீனாவில் பிப்ரவரி 23-ம் தேதி 150 பேர் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய நாளாக இருந்தது. ஆனால், அந்த பலி எண்ணிக்கையை மிஞ்சும் வகையில் நேற்று ஒரே நாளில் அங்கு ஆயிரத்து 290 பேர் பலியாகியுள்ளதால் அந்நாட்டு மக்களும், அரசாங்கமும் திகைத்து நிற்கின்றனர்.