இரண்டே வாரங்களில் 11 மில்லியன் கொரோனா பரிசோதனை..!! வுஹான் நகரை சல்லடை போட்டு சலித்த சீனா..!!
இந்தப் பரிசோதனைக்காக மட்டும் 900 மில்லியன் யுவான், அதாவது 127 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகி இருப்பதாகவும் சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெறும் இரண்டே வாரங்களில் வுஹான் நகரில் மொத்தம் 11 மில்லியன் மக்களுக்கு சீனா கொரோனா பரிசோதனை செய்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுபே மாகாணம் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது, இதுவரை உலக அளவில் 64 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 லட்சத்து 82 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸ் உருவான சீனாவில் இதுவரை 83 ஆயிரத்து 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4634 ஆக உள்ளது. முன்னதாக கொரோனா வைரஸ் பிறப்பிடமான வுஹானில் வைரஸ் தீவிரமானதையடுத்து மொத்த நகரமும் மூடி சீல் வைக்கப்பட்டது, சுமார் 75 நாட்கள் முழுஅடங்கில் இருந்த வுஹான் 8 வார காலத்திற்குப் பின் கடந்த ஏப்ரல் 9-ம் தேதி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
அதனையடுத்து ஒரு மாத காலம் வரை எந்த வைரஸ் தோற்றும் இல்லாதிருந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக சில இடங்களில் வைரஸ் அறிகுறிகள் தென்பட்தையடுத்து வுஹான் நகரில் உள்ள சுமார் 11 கோடி பேருக்கும் வைரஸ் பரிசோதனை செய்ய சீன அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இந்த சோதனையை வெறும் 10 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் எனவும் திட்டமிடப்பட்டது, அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் எப்படி சோதனை மேற்கொள்வது என்பது குறித்து அதிகாரிகளிடம் இருந்து முழு திட்டத்தை பெற்ற அரசு, அதற்கான பணிகளை அசுர வேகத்தில் தொடங்கியது. குறிப்பாக அதிக மக்கள் நெரிசல் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதிக்க வேண்டும் எனவும், வயதானவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமெனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதற்கான பணி கடந்த மே 13-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், 12 நாட்களில் வெற்றிகரமாக பரிசோதனைகள் நிறைவு பெற்றுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள சீன பிரதமர் லீ கெகியாங் தொற்றுநோய் எங்கு கண்டறியப்பட்டாலும் அது உடனடியாக கையாளப்படும், ஒருபோதும் அதை மூடி மறைப்பது அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். பரிசோதனையில் ஈடுபட்ட ஊழியர்கள், மருத்துவர்கள், வுஹான் நகரில் அனைவருக்கும் ஸ்கிரீனிங் செய்வதற்கு தேவையான பல்வேறு முறைகளை பயன்படுத்தினர். கொரோனா நோய் தொற்று தடமறிதல் தொடங்கி, நோயறிதல், ஆன்டிபாடி அளவீடுகள் என கொரோனா வைரஸ் தொடர்பான பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களில் 11 மில்லியன் மக்களுக்கு பரிசோதனை நடத்தியது உண்மையிலேயே ஆச்சரியமாகவும், அதிசயமானதாகவும் உள்ளது என உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர். தங்களது தொண்டையில் திரவம் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த இரண்டு வாரத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில் சுமார் 300 வைரஸ் அறிகுறிகள் கண்டறியப்பட்டதாகவும், 1174 நெருங்கிய தொடர்புகள் சோதிக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பரிசோதனைக்காக மட்டும் 900 மில்லியன் யுவான், அதாவது 127 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகி இருப்பதாகவும் சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனை மூலம் வுஹான் மக்கள் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ வழிவகுக்கும் என்றும், இந்த செலவு செய்யப்பட்ட நிதி, ஒரு பயனுள்ள முதலீடுதான் எனவும் சீனா தெரிவித்துள்ளது. மேலும் வுஹான் நகரம் முழுவதும் இந்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என நாட்டின் சுகாதார நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர், அதேவேளையில் நகரம் மீண்டும் எந்த அச்சமுமின்றி இயங்க, தற்போது நடத்தப்பட்ட சோதனை உதவுமென சீன அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளை மிரட்சியடைய செய்துள்ளது.