ராணுவம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மூலமாக, தன்னுடைய சுயநலத்திற்காக எந்தநாட்டு எல்லையிலும் எத்தகைய கொடூரத்தையும் அரங்கேற்ற துணிந்துள்ள சீனா, தென்சீனக்கடல் தொடங்கி கிழக்கு லடாக் எல்லை வரை தனது கொடூர முகத்தை காட்டிவருகிறது. கிட்டத்தட்ட 14  நாடுகளுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் சீனா, அதில் 12 நாடுகளிடம் தனது ராணுவத்தை காட்டி ரவுடித்தனம் செய்து வருகிறது. எல்லை விரிவாக்கம் என்ற கொடூர சிந்தையுடன்  ஒருபுறம் அண்டை நாடுகளை அச்சுறுத்தி வரும் இதேவேளையில், தனது சொந்த நாட்டிற்குள் உள்ள உய்குர் இன இஸ்லாமிய மக்களை இனவாதம் என்ற அடிப்படையில் பல்வேறு வகையில் அடிமைப்படுத்தி துன்புறுத்தி வருகிறது சீனா. உலகளவில் சுமார் 2 கோடி பேர் உய்குர் மொழி பேசுபவர்களாக இருந்தாலும், பெரும்பான்மையானோர் சீனாவின் மேற்கு மாகாணங்களில் ஒன்றான ஜின்ஜியாங்கில் வசிக்கின்றனர். 

சீனாவில் வாழ்ந்துவரும் ‘உய்குர்’இன முஸ்லிம்கள் தாங்கள் இருக்கும் பகுதியை தன்னாட்சி உரிமைபெற்ற சுதந்திர தனிநாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வருகின்றனர். இதனை கடுமையாக அடக்கிவரும் சீனா, கடந்த சில வருடங்களாகவே ஜின்ஜியாங் பகுதியில் உள்ள உய்குர் இன மக்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு இவ்வினத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் துணியை அணிவது கூடாது, ஆண்கள் நீளமான தாடி வளர்ப்பது போன்றவை கூடாது என தடைவிதித்துள்ளது. மேலும்  சந்தேகத்திற்கிடமானோர் என்ற பெயரில் ஜின்ஜியாங்கில் உள்ள உய்குர் இன மக்கள் முகாம்களில் அடைத்து வைத்து கொடுமைபடுத்தப் படுகின்றனர். சீனாவின் அடக்குமுறையால் இதுவரை சுமார் ஒரு மில்லியன் உய்குர் முஸ்லிம்கள் காணாமல் போயிருப்பதாகவும் வரும் தகவல்கள் நெஞ்சை பதறவைக்கின்றன. இஸ்லாம் மதத்தை பின்பற்றும் இம்மக்களை சீனர்களின் வாழ்க்கை முறைக்கு 5 ஆண்டுகளுக்குள் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. 

சீனா அதன் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உய்குர்களை அங்குள்ள வதை முகாம்களில் அடைத்து சித்திரவதை செய்துவரும் நிலையில் சீனாவில் தங்களுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து உய்குர்கள் பன்னாட்டு  நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக உய்குர்களின் முதல் முயற்சியாகும். இந்த இனத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 11 லட்சத்துக்கும் அதிகமானோர் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.  முகாம்களிலுள்ள உய்குர் பெண்களின் தலைமுடியை வெட்டி அவற்றை வெளிநாடுகளுக்கு அழகு சாதனப் பொருட்களாக சீனா ஏற்றுமதி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் ஜின்ஜியாங்கிலிருந்து நியூயார்க்கிற்கு துறைமுகத்திற்கு வந்த கப்பலில் சுமார் 13 டன் சிகை அலங்கார பொருட்கள் இருந்துள்ளது. இவைகள் உய்குர் இன பெண்களின் தலை முடிகளை வெட்டி தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்கள் என சந்தேகிக்கப்படுகிறது.

 

இதை அமெரிக்க சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதன் மொத்த மதிப்பு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் என கருதப்படுகிறது, இது குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க சுங்கத்துறை ஆணையர் பிரண்டா ஸ்மித்,  பிற நாடுகளில் இருந்து இது போன்ற அழகு சாதனப் பொருட்கள் அமெரிக்காவுக்கு வரும்போது இதை அனுப்பிவைக்கும் நிறுவனங்களின் உண்மை தன்மை, தரம் போன்றவை ஆராயப்படுவதுடன் அங்கு ஏதாவது மனித உரிமை மீறல்கள் நடந்து இருக்கிறதா என்பதை உறுதி செய்வது அவசியம், மனித  உரிமை மீறலுக்கு அமெரிக்காவில் ஒரு போதும் அனுமதி இல்லை எனறும் அவர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே உய்கர் இன மக்களுக்கு எதிரான அடக்குமுறையை அமெரிக்கா  கண்டித்து வரும் நிலையில், தற்போது உய்கர் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.