மோடிக்கு வந்த மிரட்டல்..!! சீனா-அமெரிக்கா இடையேயான மோதலில் இந்தியா விலகியிருப்பது நல்லது..!!
இந்நிலையில் இந்தியாவை மிரட்டுவதற்காக இந்திய எல்லையில் தனது படைகளை குவித்து வரும் சீனா, இந்தியாவை மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சீனா அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இருந்து விலகி இருப்பது இந்தியாவுக்கு நல்லது என சீனா இந்தியாவை எச்சரித்துள்ளது. அமெரிக்கா-சீனா இடையே பனிப்போர் இருந்து வரும் நிலையில் சீனாவில் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் இவ்வாறு ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அதனால் மற்ற நாடுகளை விட அமெரிக்கா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் உலக வல்லரசான அமெரிக்காவையே நிலைகுலையச் செய்துள்ளது.
உயிரிழப்புகளிலிருந்தும், பொருளாதார சரிவில் இருந்தும் மீள முடியாமல் அமெரிக்கா தவித்து வருகிறது, அமெரிக்காவின் ஒட்டுமொத்த கோபமும் சீனாவின் மீது திரும்பியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா, சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. சீனாவின் பொருளாதாரத்தை மட்டு படுத்துவதன் மூலமே மேற்கத்திய நாடுகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. இந்நிலையில் சீனாவிலுள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது, மேற்கத்திய நாடுகள் இந்தியாவில் தொழில் தொடங்க தீவிரம் காட்டி வருகின்றன.
கொரோனா வைரஸால் மற்ற நாடுகள் வீழ்ச்சியை சந்தித்து வரும் சூழலை பயன்படுத்தி பொருளாதார ரீதியாக வல்லரசாகும் கனவில் சீனா இருந்து வரும் நிலையில், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் முடிவு சீனாவின் திட்டத்தை சுக்குநூறாக நொறுக்கி உள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கனவே நிலவிவந்த வர்த்தக போர் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆசிய கண்டத்தில் சீனாவுக்கு நிகரான வல்லமை படைத்த இந்தியாவுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருவது சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இந்தியாவை மிரட்டுவதற்காக இந்திய எல்லையில் தனது படைகளை குவித்து வரும் சீனா, இந்தியாவை மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இது குறித்து கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ள சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான குளோபல் டைம்ஸ், சீனா-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போட்டியில் இருந்து இந்தியா விலகியிருப்பது நல்லது எனவும், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான சீனா-அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரில் இந்தியா ஒதுங்கி இருக்கவேண்டும் என எச்சரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலில் குறுக்கிடுவதால் இந்தியாவுக்கு ஒரு நன்மையும் இல்லை, ஆதாயங்களை விட இழப்புகளே அதிகம் ஏற்படும், எனவே மோடி அரசாங்கம் புதிய உலகளாவிய அரசியல் வளர்ச்சியை வெளியுறவு ரீதியாகவும் விவேகமாக எதிர்கொள்ளவேண்டும் என அக்கட்டுரை எச்சரித்துள்ளது. சமீபத்தில் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்டுவரும் மோதலில் மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது என ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளும் அதை புறக்கணித்தன. இந்நிலையில் சீனா இந்தியாவுக்கு இவ்வாறு அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.