பாங்கொங் த்சோ ஏரிப்பகுதியில் சீனா சூழ்ச்சி...!! உறுதியாக நிற்கும் இந்திய ராணுவம்..!!
விரல்-4 மற்றும் விரல்-8 க்கு இடையே சீனா ஏராளமான படைகளை குவித்து வைத்திருந்ததை காட்டியது. அது சாம்பல் பகுதியாக இருந்து வருகிறது, இதற்கு முன்னர் இருபடைகளும் அந்த பகுதியில் ரோந்து மேற்கொண்டு வந்தன,
இந்திய-சீன எல்லை விவகாரத்தில் இருநாட்டு ராணுவ தளபதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் இந்தியா முன்வைத்த பல்வேறு கருத்துக்களை சீனா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் பாங்கோங் த்சோ ஏரிப்பகுதி விவகாரத்தில் மட்டும் சீனா பிடிவாதம் காட்டுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் பாங்கோங் த்சோ பகுதி இன்னும் கவலைக்குரிய பகுதியாகவே இருந்து வருகிறது என இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய-சீன எல்லையில் கடந்த ஒரு மாதகாலமாக பதற்றம் நீடித்து வரும் நிலையில் அதை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ஜூன் 6-ஆம் தேதி 14-கார்ப்ஸ் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் தெற்கு சிஞ்சியாங் இராணுவ மாவட்ட தளபதி மேஜர் ஜெனரல் லியு லின் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து, எல்லையில் பல்வேறு பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த சீனப்படைகள் பின்வாங்கியுள்ளன.
ஆனால் பாங்கொங் த்சோ ஏரியை ஒட்டியுள்ள விரல் பகுதியில் தனது ஆதிக்கத்தை குறைத்துக்கொள்ள சீனா மறுத்து வருகிறது. இந்நிலையில் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது குறித்து வெள்ளிக்கிழமை ராணுவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். பாங்கொங் த்சோ ஏரிப்பகுதியை ஒட்டியுள்ள விரல் பகுதிகள் அனைத்தும் தனக்கு சொந்தம் என இந்தியா கூறிவரும் நிலையில், இந்தியாவை விரல் 4 வரை மட்டுமே சீனா ரோந்து செல்ல அனுமதிக்கிறது. மீதமுள்ள 8 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்திய வீரர்கள் ரோந்து பணியை மேற்கொள்ள முடியாதவாறு சீனா தடுத்து வருகிறது. இந்நிலையில், ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் விரல் பகுதிகள் அனைத்தும் இந்தியாவுக்கு சொந்தம் எனவும் அங்கிருந்து சீனா படைகளைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு சீனாவிடமிருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய ராணுவ வட்டாரங்கள், எல்லை பிராந்தியத்தில் உள்ள பல பிரச்சினைகள் பற்றி இந்தியாவின் கருத்துகளை சீனர்கள் ஏற்றுக்கொண்டாலும், பாங்கொங் த்சோ பகுதியில் இழுபறி நீடிக்கிறது, அதில் அவர்கள் எந்த விதமான பதிலையும் அளிக்கவில்லை, ஜூன்-6 தேதி நடந்த இருநாட்டு உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் விரல் பகுதி-8க்கு ரோந்து செல்வது குறித்து முடிவு எட்டப்படவில்லை.
எனவே இந்த பேச்சுவார்த்தை நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பிருக்கிறது என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மே-27ஆம் தேதி முதல் வெளியான செயற்கைக்கோள் படங்கள், விரல்-4 மற்றும் விரல்-8 க்கு இடையே சீனா ஏராளமான படைகளை குவித்து வைத்திருந்ததை காட்டியது. அது சாம்பல் பகுதியாக இருந்து வருகிறது, இதற்கு முன்னர் இருபடைகளும் அந்த பகுதியில் ரோந்து மேற்கொண்டு வந்தன, ஆனால் தற்போது அங்கு தடை ஏற்பட்டுள்ளது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் முதலே விரல்-8 பகுதிக்கு இந்திய படைகள் ரோந்து செல்வதை சீனா தடுத்துவருகிறது. இதனால், செப்டம்பர் இரண்டாவது வாரத்தில், இந்திய துருப்புக்கள் விரல்-8 மலையின் பின்னால் சுற்றி வந்து விரல் 8 பகுதியை அடைய மாற்று பாதையை பயன்படுத்த தொடங்கின. இதை சீனர்கள் ஆட்சேபித்தனர். இந்நிலையில் இருதரப்பு பிரதேச தளபதிகள் புதன்கிழமை சந்தித்தனர், அதில் அடுத்த கலந்துரையாடலுக்கான தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. "பேச்சுவார்த்தைகள் மெதுவாகவே நடக்கும் என்றும், பிரச்சனை தீர சிறிது காலம் எடுக்கும்" என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.