உலக நாடுகளை புரட்டி போட்டிருக்கும் கொரோனா வைரஸ் சீன நாட்டின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் முதன்முதலில் பரவிய நிலையில் அங்கு 3 ஆயிரத்து 331 பேரை காவு வாங்கியுள்ளது. டிசம்பர் முதல் கொரோனா தாக்குதலால் கடும் பாதிப்படைந்திருக்கும் சீனாவில் தற்போது இயல்பு நிலை மெதுவாக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளில் கொரோனா தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இத்தாலி, ஸ்பெயின்,ஈரான், அமெரிக்கா,பிரான்ஸ், இந்தியா என உலகின் 203 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281 ஆக உயர்ந்து 111 பேர் பலியாகி இருக்கின்றனர். உலகம் முழுவதும் 13,45,653 பேருக்கு கொரோனா பரவி இதுவரை 74,644  பேர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். வைரஸ் பரவிய 2,78,413 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் நிலைகுலைந்து போயுள்ளது.

தற்போது சீனா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், உலகம் முழுவதும் 50 நாடுகளுக்கு மாஸ்க், கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் உடைகள், வென்டிலேட்டர் போன்ற மருத்துவ உபகரணங்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில் தங்களது நாடு இக்கட்டான நேரத்தில் இருந்த போது இந்தியா உதவியதை மனத்தில் கொண்டு, சீனா தக்க சமயத்தில் உதவியுள்ளது. 

அதாவது ஒரு லட்சத்து 70 ஆயிரம் பாதுகாப்பு உடைகளை இந்தியாவிற்கு சீனா இலவசமாக வழங்கியுள்ளது. இதுவரை மத்திய அரசால் 2.94 லட்சம் பாதுகாப்பு உடைகள் தயார் செய்யப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மருத்துவர்கள் பயன்படுத்தும் 2 லட்சம் முகக்கவசங்கள் மற்றும் பாதுகாப்பு உடைகள் ஆகியன மகாராஷ்ட்ரா, டெல்லி, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் உச்சகட்டத்தில் இருந்த நெருக்கடியான நேரத்தில் இந்தியா மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதி இருந்த தடையை நீக்கி சீனாவிற்கு உதவியது. அதற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக தற்போது இந்தியாவிற்கு சீனா உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.