பிரம்மபுத்திரா ஆற்றில் அணை? என்ன சொல்கிறது சீனா..!
பிரம்மபுத்திரா நதியை வழிமறிக்கும் கட்டுமானம் குறித்த திட்டம் எதுவும் இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து அருணாச்சலப் பிரதேசம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் ஆறு பிரம்மபுத்திரா. இந்தியாவின் மிகப் பெரிய ஆறானா பிரம்மபுத்திரா, அஸ்ஸாம், மேகாலயா வழியாக வங்கதேசத்துக்குச் செல்கிறது. பிரம்மபுத்திரா ஆற்றின் மூலம் வடகிழக்கு மாநிலங்கள் பயன்பெறுகின்றன.
இந்த ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பணியை சீனா மேற்கொள்ளப்போகிறது என்று செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில், இந்த தகவலை சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹா சன்யங் மறுத்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், பிரமபுத்திரா ஆற்றின் குறுக்கே நீரை தடம் மாற்றும் கட்டுமானப் பணிகளை சீனா தொடங்கவுள்ளதாக பரவும் தகவலில் உண்மையில்லை. அது தவறான செய்தி. நாடுகளுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டை சீனா தொடரும். இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீரை தடம்மாற்றியோ அணை கட்டி சேமித்தோ சீனா பயன்படுத்தாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.