உலகையே உலுக்கும் கொரோனா.. மொட்ட கடுதாசியால் கடும் சிக்கலில் சீன அதிபர்
சீன அதிபர் ஜி ஜின்பிங் அதிபராக இருப்பதற்கே தகுதியில்லாத நபர் என்றும் அவரை பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சீனியர் தலைவர்களுக்கு பெயரிடப்படாத கடிதம் ஒன்று வந்துள்ளது. அது தற்போது வைரலாகி, சீன அதிபருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைக்கு உலகையே மிரட்டிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் தான் உருவானது. அந்த நாடு அதை கண்டறிந்து கட்டுப்படுத்த தவறியதால், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெய்ன் ஆகிய நாடுகளில் பேரிழப்புகளை ஏற்படுத்திவருவதுடன், இந்தியா உட்பட உலக நாடுகளையே கடுமையாக அச்சுறுத்திவருகிறது.
கொரோனா வைரஸுக்கு மருந்து இல்லாததால், தனிமைப்படுதலும் சமூக விலகலுமே தற்காத்துக்கொள்வதற்கான வழி என்பதால், அனைத்து நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அதனால் உலகப்பொருளாதாரமே முடங்கியுள்ளது. உலகில் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் எதுவுமே இல்லாமல் முடங்கியுள்ளது. இவ்வளவு பெரிய பேரிழப்புக்கு சீனா தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் திறமையின்மையும், அதிபராக அவர் சரியான நடவடிக்கைகளை எடுக்காததும், அலட்சியமும் தான் இதற்கு காரணம் என்றும், அவர் அதிபர் பதவிக்கே தகுதியில்லாதவர் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான, லி கெகியாங், வாங் யாங், துணை தலைவர் வாங்க் கிஷான் ஆகிய மூவருக்கும் அந்த கட்சியை சேர்ந்த ஒருவர் பெயரை குறிப்பிடாமல் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், கொரோனா வைரஸை சரியான நடவடிக்கைகளை எடுத்து தடுக்காமல், உலகளாவிய அளவில் அனைத்து நாடுகளுக்கும் பிரச்னையை ஏற்படுத்தியதுடன், அமெரிக்காவுடனான உறவில் மேலும் விரிசலை ஜி ஜின்பிங் அதிகப்படுத்தியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அடிப்படையான சில நடவடிக்கைகளை கூட எடுக்கவில்லை.
கொரோனா வைரஸால், உள்நாட்டு பொருளாதாரம் மட்டுமல்லாமல் உலக பொருளாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச உறவிலும் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது இந்த கொரோனா பாதிப்பு. இவ்வளவுக்கும் காரணம் அதை கட்டுப்படுத்த தவறிய ஜி ஜின்பிங்கின் மோசமான ஆட்சி முறைதான். அவர் மீது நடவடிக்கை எடுக்க உடனடியாக உயர்மட்ட கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும்.
மேலும் அந்த கடிதத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஜி ஜின்பிங் சீன அதிபராக பதவியேற்ற பின், வெளிநாடுகளுடனான உறவு மேம்பட்டிருக்கிறதா அல்லது மோசமாகியிருக்கிறதா? அண்டை நாடுகளுடன் பகையை வளர்ப்பதும் அமெரிக்காவுடனான பகையும் சீனாவின் வளர்ச்சிக்கு நல்லதா கெட்டதா? என்பன போன்ற கேள்விகளும் அந்த கடிதத்தில் எழுப்பப்பட்டுள்ளது.
ஹாங்கான் பத்திரிகையாளர் ஒருவர், இந்த கடிதத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, இதை எழுதியது யார் தெரியுமா என்று கூட கேள்வியெழுப்பியுள்ளார். ஆனால் யார் என்பதை கண்டறிய முடியவில்லை.
அந்த மொட்டை கடுதாசியை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் ஷேர் செய்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்த பதவியில் இருப்பதற்கே தகுதியற்றவர். கம்யூனிஸ்ட் தலைவரான அவர், சர்வாதிகார போக்கில் நடக்கிறார். கொரோனாவை கட்டுப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு அதிபராக அவர் தோற்றுவிட்டார். அவர் அந்த பதவியில் இருந்து விலக வேண்டும் அதேபோல சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று மனித உரிமை கமிஷனை சேர்ந்த ஜு ஜியாங் வலியுறுத்தியிருந்தார். அவர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். கொரோனாவை கட்டுப்படுத்த ஜி ஜின்பிங் தவறிவிட்டார் என்று சீனாவின் மிகப்பெரிய தொழிலதிபாரான ரென் ஜிகியாங் விமர்சித்திருந்தார்.
கொரோனா உருவான வுஹான் நகரின் மையத்தில் மக்கள் அடர்த்தி அதிகமான அந்த இடத்தில் மக்களுக்கு பார்க் கட்டித்தரப்போவதாக பொய்யை கூறி, ரகசியமாக கட்டியுள்ளார் ஜி ஜின்பிங். அதனால் அப்பகுதி மக்கள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் தற்போது சீனாவில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்தால் கூட, கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை அதிகமாக காட்டக்கூடாது என்பதற்காக சிகிச்சையளிக்க மறுத்து மருத்துவமனைகள் விரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் தலைவர்களே ஜி ஜின்பிங் மீது அதிருப்தியில் இருக்கின்றனர் என்று தெரிகிறது.