டோக்லம் பகுதி எங்களுக்குத் தான் சொந்தம்.. இந்தியாவை வம்புக்கு இழுக்கும் சீனா
சிக்கிம் எல்லையில் அமைந்துள்ள டோக்லம் பகுதி தங்களுக்கே சொந்தம் எனவும் அதனால் சட்டப்பூர்வமாக அங்கு கட்டிடங்கள் கட்டுவதாகவும் சீனா தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் எல்லையில், சிக்கிம் மாநிலத்தின் டோக்லம் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு கடந்த ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். இதனால், ஏற்பட்ட மோதலால் இருதரப்பும் அப்பகுதியில் ராணுவத்தினரை குவித்தது. அதனால் பதற்றம் நிலவியது. அதன்பின்னர் இந்தியா-சீனா தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருநாடுகளும் தங்களது படைகளை திரும்பப் பெற்றன.
இதையடுத்து அமைதி நிலவி வந்த நிலையில், தற்போது டோக்லம் பகுதியில் மீண்டும் கட்டுமானப் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. அதனால் அப்பகுதியில் நிரந்தரமாக ராணுவத்தினரை நிறுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் லூ காங், டோக்லம் விவகாரத்தில் சீனா தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. டோக்லம் பகுதி எப்போதுமே சீனாவுக்குத்தான் சொந்தம். டோக்லம் சீனாவின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் எந்தவிதமான பிரச்னைக்கும் இடமில்லை. எங்களின் இறையான்மை நிலைநாட்டப்படும். எங்கள் படைகள் தங்குவதற்கும், மக்கள் வாழ்வதற்கும் இங்கு மிகப்பெரிய அளவில் கட்டிடங்கள் கட்டுகிறோம் என லூ காங் தெரிவித்தார்.
ஏற்கனவே சர்ச்சை நீடித்துவரும் டோக்லம் பகுதியில் பதற்றம் தணிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் சீனா கட்டிடங்கள் கட்டுவதும் அதை நியாயப்படுத்துவதும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அதைத் தடுக்கும் வகையில் இந்தியாவும் டோக்லம் பகுதியில் படைகளை குவிக்க வாய்ப்புள்ளது.