உலகத்தையே அழிக்காம விடாதுபோல இந்த சீனா..!! மீண்டும் இறைச்சி சந்தையில் கொரோனா..!!
மேலும் சந்தையுடன் தொடர்புடைய 45 பேருக்கு அறிகுறியற்ற வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் அங்கொன்றும் இங்கொன்றுமாக மீண்டும் தலையெடுத்து வரும்நிலையில், வுஹான் நகர் முழுவதும் சுமார் 98 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகளை அரசு செய்துள்ளது. இந்நிலையில் மத்திய பெய்ஜிங்கில் உள்ள நகரத்தின் மிகப்பெரிய இறைச்சி மற்றும் காய்கறி சந்தையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து போர்க்கால நடவடிக்கையாக அந்த சந்தையை அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து பெய்ஜிங்கில் பரிசோதனையை சீன அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் வுஹான் சந்தையில் தோன்றிய வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் வுஹான் சந்தையைப் போலவே, சீன தலைநகர் பெய்ஜிங்கின் தென்மேற்கில், பெங் டாய் மாவட்டத்தில் உள்ள " ஜின் பாடி" சந்தையில் வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. ஜூன்-3ஆம் தேதி சந்தைக்கு இறைச்சி மற்றும் கடல் உணவுகளை வாங்க வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் ஜின் பாடி மற்றும் நகரத்தின் ஐந்துசந்தைகளில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
உடனே சீன இறைச்சி உணவு ஆராய்ச்சி மையத்தின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், உணவு பொருட்களின் தரத்தை சரிபார்த்து சோதனை செய்தனர், அங்கு சோதனை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் உள்ள முக்கிய பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவு சந்தைகளில் உள்ள சுமார் 1,940 தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் சுமார் 5 ஆயிரத்து 424 மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன, அதன் மூலம் மொத்தம் நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 4 பேரில் மூவர் ஜின் பாடி சந்தையில் கடலுணவு பிரிவில் பணிபுரிபவர்கள் ஆவர். நோய்த்தொற்று அறிகுறி உள்ளவர்கள் யாரும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யாதவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று மீண்டும் நகரத்திற்குள் பரவ ஆரம்பமாகி இருக்கிறது என்பதையே இது காட்டுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் சந்தையுடன் தொடர்புடைய 45 பேருக்கு அறிகுறியற்ற வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இறைச்சி வெட்டும் சந்தையில் பயன்படுத்தப்படும் இறைச்சி நறுக்கும் கட்டைகள் உள்ளிட்ட 40 வகையான பொருட்களில் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் இதுவரை மக்கள் வாழ்க்கை இயல்பாக இருந்து வந்த நிலையில், வைரஸ் நகரத்தில் பரவி விடக்கூடாது என்பதால் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தம் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். ஜின் பாடி சந்தை முலமே பெய்ஜிங்கிற்கு 70% காய்கறிகள், 80% பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மாற்று இடங்களில் தற்காலிக சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்கள் சோதிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது, அதேபோல் ஜின் பாடியை சந்தையை சுற்றியுள்ள ஒன்பது மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் சந்தைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி வளாகங்கள் சீல் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளன. நகரத்தில் சுற்றுலா குழுக்கள் மற்றும் அனைத்து வகையான விளையாட்டு நிகழ்வுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அனைவரும் வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு ஹோட்டல்களில் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். பொதுவாக சீன மக்கள் அமெரிக்கா அல்லது யுனைடெட் கிங்டம் போன்ற நாடுகளில் இருந்து திரும்பி வருகிறார்கள், சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பெய்ஜிங்கில் கொரோனா அறிகுறி மீண்டும் தென்பட தொடங்கியுள்ளது. எனவே மீண்டும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கும் நிலை சீனாவுக்கு உருவாகியிருப்பதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.