இந்தியாவை விட சீனா மற்றும் பாகிஸ்தானில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகமென சர்வதேச அளவிலான அறிக்கை  ஒன்று தெரிவித்துள்ளது. உலகிலேயே அணு ஆயுத வல்லமையில் ரஷ்யாவே முதலிடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலகமே கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவோ சீனா, பாகிஸ்தான் என்ற  எதிரிகளிடம் இருந்து நாட்டை காக்க போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக லடாக் எல்லைப் பகுதியில் சீனா ராணுவத்தை குவித்து இந்தியாவை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவும் அதற்கு பதிலடியாக தன் படைகளை குவித்துள்ளதால் இருநாட்டு எல்லையிலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சினையை தீர்த்து கொள்ள இருநாடுகளும் முன்வந்துள்ள நிலையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. மற்றொருபுறம்  இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தான் அடிக்கடி எல்லையில் அத்துமீறுவதுடன், தங்கள் நாட்டு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்யும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது.

இந்தியா கண்கொத்தி பாம்பாக இருந்து சதிகளை முறியடித்து வரும் நிலையில்  மற்றொருபுறம் நேபாளம், இந்தியா தனது எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்து விட்டதாக கூறி நீலிக்கண்ணீர் வடித்து வருகிறது.  இப்படி எல்லையையொட்டி உள்ள மூன்று நாடுகளும் இந்தியாவுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில் இந்தியா,  இராணுவ மற்றும் இராஜதந்திர ரீதியில் மூன்று நாடுகளையும் சமாளித்து வருகிறது. மேலும் உலகிலேயே அதிக  ராணுவ வீரர்களைக் கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ள நிலையில், எதிரிகளுக்கு சரியான பதிலடி கொடுக்க ஆயுத பலத்தையும் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நெருக்கடியாக சூழ்நிலையில், சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளிடம் எவ்வளவு அணு ஆயுதங்கள் இருக்கிறது என்பது பற்றிய புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் இந்தியாவை சற்று அதிர்ச்சி அடைய வைத்துள்ளது,  எல்லையில் தொல்லை கொடுத்துவரும் பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளில் இந்தியாவை விட அதிக அணு ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.  இதுகுறித்து ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவான ஸ்டாக்ஹோம் நிறுவனம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி (சிப்ரி அறிக்கை 2020) என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. 

 அதில் அணு ஆயுதங்களை கொண்ட நாடுகளை பற்றிய விரிவான புள்ளி விவரத்தையும் வெளியிட்டுள்ளது. சிப்ரியின் கருத்துப்படி உலகில் மொத்த அணு ஆயுதங்களில் 90 சதவீதத்தை ரஷ்யாவும், அமெரிக்காவும் வைத்திருக்கின்றன. அதேநேரத்தில் இருநாடுகளும் பழைய அணு ஆயுதங்களை நீக்கி வருவதால், கடந்த ஆண்டுகளில் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை ஓரளவிற்கு குறைந்துள்ளது, இருப்பினும் பழைய ஆயுதங்களுக்கு மாற்றாக இந்த இரு நாடுகளும் புதிய அணு ஆயுதங்களை தொடர்ந்து உருவாக்கி வருவது கவலைக்குரியதாக உள்ளது. உலக அளவில்  2010 முதல் 2019 வரை ஆயுத கொள்முதல் 5.5 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் சுமார் 145 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ராணுவ தளவாடங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது, கடந்த 10 ஆண்டுகளில் இதுவே அதிக  செலவாகும், குறிப்பாக வட ஆப்பிரிக்க நாடுகள் 2019 விட இந்த ஆண்டு 67% ஆயுதத்திற்காக செலவிட்டுள்ளன. சீனாவும் தனது அணுசக்தியை மேம்படுத்துவதற்காக அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது. தரை, காற்று மற்றும் கடலில் இருந்து தாக்கும் புதிய ஏவுகணைகளை அது தயாரித்து வருகிறது. 

இது மட்டுமல்லாமல் அணுஆயுதங்களுடன் கூடிய சில போர் விமானங்களையும் அது தயாரித்து வருகிறது. இதற்கு முன்னர் அணுசக்தி பற்றிய அதிக தகவல்களை பரிமாறி கொள்ளாத சீனா, கடந்த சில ஆண்டுகளாக அணு ஆயுதங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து உலகத்திற்கு சில தகவல்களை அறிவித்துவருகின்றன. சிப்ரியின் அறிக்கைப்படி, உலகில்  மொத்தம் 9 நாடுகளில் 13,400 அணு ஆயுதங்கள் உள்ளன. அதில் 6,375 அணு ஆயுதங்களுடன் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது, 30 முதல் 40 ஆயுதங்களுடன் வடகொரியா கடைசி இடத்தில் உள்ளது. சுமார் 5,800
அணு ஆயுதங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும்,  320 அணு ஆயுதங்களுடன் சீனா மூன்றாவது இடத்திலும்  உள்ளன. பிரான்சில் 290 அணு ஆயுதங்களும், பிரிட்டனில் 215 அணு ஆயுதங்களும்,  பாகிஸ்தானில் 160 அணு ஆயுதங்களும், இந்தியாவில் 150 அணு ஆயுதங்களும், 
இஸ்ரேலில் 90 அணு ஆயுதங்களும், வட கொரியாவில் 30 முதல் 40 வரை அணு ஆயுதங்கள் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.