வுகானில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சீன அரசு மீண்டும் எச்சரித்துள்ளது ,  மீண்டும் அங்கே இரண்டாவது முறையாக வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது .  சீனாவில் வுகானில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது .  இந்த வைரஸால் கிட்டத்தட்ட உலக அளவில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் .  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது . இந்நிலையில் வைரஸ் பிடியில் இருந்து சீனா மெல்ல மெல்ல விடுதலையாகி வருவதாக தெரிவித்துள்ள .   தற்போது சீனா வுகான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவித்துள்ளது .  சீனாவில் இதுவரை 81 ஆயிரத்து 600 க்கும்  மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  இதில் 3 ஆயிரத்து 322 பேர் உயிரிழந்துள்ளனர்  என சீனா வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவித்துள்ளது ,  ஆனால் சீனாவின் புள்ளிவிவரம் நம்பத் தகுந்ததாக இல்லை என உலக நாடுகள் விமர்சித்து வருகின்றன. 

 

இந்நிலையில் சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் சீனாவில் நடத்திய பரிசோதனையில் புதிதாக 31 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில்  நான்கு பேர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர் .  தற்போதுவரை  அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் மையம் கொண்டுள்ள கொரோனா வைரஸ் மீண்டும்  கிழக்காசிய நாடுகளுக்கு தாவும் எனவும் வல்லுனர்கள் கணித்துள்ளனர் .  இந்நிலையில் மீண்டும் சீனா சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை கொரோனா வைரஸ் தாக்கும் அச்சம் எழுந்துள்ளது .  இதனால் மீண்டும் வுகான்  உள்ளிட்ட நகரங்களுக்கு கொரோனா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . அதாவது  மக்கள் வீட்டுக்குள்ளேயே இருந்து  வைரஸ் பரவலை தடுக்க வேண்டுமெனவும் சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது . இந்நிலையில்  இது குறித்து தெரிவித்துள்ள வுகான்  கம்யூனிஸ்ட் கட்சி தலைவரான வாங் ஜாங்ளின், உள் மற்றும் வெளிப்புற அபாயங்கள் காரணமாக நகரத்தில் மீண்டும் தொற்று  ஏற்படும் அபாயம் இருக்கிறது இதை தடுக்கவும், பரவாமல்  கட்டுப்படுத்தவும் தொடர்ந்து ஊரடங்கு பராமரிக்க வேண்டும் எனக் கூறினார். 

இந்நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது .  ஏப்ரல் 8ஆம் தேதி முதல் மக்களின் பயண கட்டுபாடுகளும் தளர்த்தப்படுகிறது,  என அதிகாரிகள் கூறியுள்ளனர் .  இதற்கிடையில் தோற்று நோயின் போது உயிரிழந்த டாக்டர் லி வென்லியாங் உள்ளிட்ட 14 சுகாதார ஊழியர்கள்  மற்றும் உயிரழந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் நாட்டிற்காக உயிரைக் கொடுத்த  தியாகிகள் என்ற அடிப்படையில்,   சனிக்கிழமை தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.   வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் உள்ள தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் சீன அரசு தெரிவித்துள்ளது,  சனிக்கிழமை காலை 10 மணிக்கு  மூன்று நிமிடங்கள் மௌனம் அனுசரிக்கப்படும் என்றும் சீனா தெரிவித்துள்ளது.