4-வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் காப்பாற்றிய நிஜ ஸ்பைடர்மேன்...! வைரலாகும் வீடியோ
4-வது மாடியில் தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை, ஸ்பைடர்மேன் பாணியில் காப்பாற்றிய மாலி நாட்டைச் சேர்ந்தவருக்கு, பிரான்ஸ் நாட்டு குடியுரிமையும், தீயணைப்புத் துறையில் வேலையும் வழங்கி அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாலி நாட்டை சேர்ந்தவர் மமூது கசாமா (22). இவர் வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்திருந்தார். பாரீசில் வடக்கு பகுதியில் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது ஒரு அடுக்குமாடி கட்டடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். கூட்டத்தை வேடிக்கை பார்க்க மமூது சென்றபோது, அங்குள்ள கட்டடத்தின் 4-வது மாடியில் பால்கனியை பிடித்தபடி 4 வயது குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தான்.
இதனைப் பார்த்த மமூது, 4 மாடி கட்டடத்தில் ஸ்பைடர்மேன்போல் கடகடவென ஏறி, குழந்தையைக் காப்பாற்றினார். அவர் குழந்தையைக் காப்பாற்றிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைத் தொடர்ந்து மமூது கசாமாவை பாராட்டிய பிரான்ஸ் அதிபர், அவரை கௌரவிக்கும் வகையில், பிரான்ஸ் நாடு குடியுரிமையை வழங்கினார். மேலும் தீயணைப்பு துறையில் பணி வழங்கவும் பிரான்ஸ் அதிபர் ஏற்பாடு செய்தார்.