சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை படம் பிடித்த நாசாவின் ஆர்பிட்டர் சாட்டிலைட்!
இந்தியாவின் சந்திரயான்-3 பயணத்தில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய பகுதியை நாசாவின் LRO என்ற ஆர்பிட்டர் சாட்டிலைட் படம் பிடித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் எல்ஆர்ஓ (LRO) செயற்கைக் கோள் சமீபத்தில் இந்தியாவின் சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய இடத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விக்ரம் லேண்டர், முதல் முறையாக நிலவின் தென் துருவத்தைத் தொட்ட சாதனையைப் படைத்தது. நாசா வெளியிட்டுள்ள இந்தப் படம் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் 27ஆம் தேதி எடுக்கப்பட்டது.
ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் படத்தைப் பகிர்ந்த நாசா விண்வெளி நிறுவனம், "LRO விண்கலம் சந்திரனின் மேற்பரப்பில் சந்திரயான் -3 லேண்டரை சமீபத்தில் படம்பிடித்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.
LRO சாட்டிலைட்டில் உள்ள கேமரா, லேண்டர் தரையிறங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகு அதனை 42-டிகிரி சாய்வுக் கோணத்தில் படம்பிடித்துள்ளது. படத்தில் லேண்டரைச் சுற்றியுள்ள பிரகாசமான ஒளிவட்டம் போலத் தெரிவது தரையிறங்கும்போது எழுந்த தூசிப் படிவுகள் என்றும் விளக்கியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள நாசாவின் தலைமையகத்தின் கீழ், மேரிலாந்தின் கிரீன்பெல்ட்டில் உள்ள நாசாவின் கோடார்ட் விண்வெளி மையத்தால் LRO ஆர்பிட்டர் சாட்டிலைட் நிர்வகிக்கப்படுகிறது.
சனாதனம் பற்றிய பேச்சுக்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்! உதயநிதிக்கு பிரதமர் மோடி சவால்!