ஈராக் நாட்டில்தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பில் 21 பேர் உடல் சிதறி இறந்தனர்.
ஈராக் நாட்டில் தலைநகர் பாக்தாத் பகுதியின் வடக்கே திக்ரித் நகர் நகர் அமைந்துள்ளது. இதன் தெற்கு நுழைவு வாயிலில் சோதனைச்சாவடி ஒன்று உள்ளது. இப்பகுதியில் எந்நேரமும் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும். இதையொட்டி பரபரப்பாக இருக்கும்.
இந்நிலையில், நேற்று காலை மக்கள் நெரிசல் மிகுந்த நேரத்தில், தற்கொலைப்படை சேர்ந்த ஒரு தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரப்பிய ஆம்புலன்சை ஓட்டி, அந்த பகுதிக்கு ஓட்டி சென்றார். திடீரென அவர், அங்குள்ள சோதனைச்சாவடி மீது பயங்கரமாக மோதி வெடிக்கச் செய்தார்.
அப்போது பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறின. இதில் அந்தப் பகுதி முழுவதும் உலுக்கியதுடன், புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த குண்டுவெடிப்பில் 5 மாணவிகள், ஒரு பெண், 3 போலீசார் உள்பட பொதுமக்கள் 13 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். 25 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக அங்கிருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதே போன்று திக்ரித்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள சமாரா நகரிலும் ஒரு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 8 பேர் உடல் சிதறி பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
