Buck Moon 2023 : சூப்பர் மூன்.. ஜூலை மாதத்தில் தோன்றும் இந்த ஆண்டின் பெரிய நிலா - எப்போது தெரியுமா?
வருகின்ற ஜூலை மாதத்தில் இந்த ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் தெரிய உள்ளது என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வானில் பல அரிய நிகழ்வுகள் நிகழ்ந்து வருகின்றன. அதே போல் தான் 2023 ஆம் ஆண்டிலும் வானில் பல நிகழ்வுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வானில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் நிகழ்வதுண்டு.
இது தவிர ரெட் மூன், ஸ்ட்ராபெர்ரி சூப்பர் மூன் போன்ற நிகழ்வுகளும் நிகழ்வதுண்டு. இந்நிலையில் 20223 ஆம் ஆண்டின் மிகப்பெரிய சூப்பர் மூன் ஜூலை மாதத்தில் வானில் தோன்றவுள்ளது. இந்த ஆண்டு நாம் சந்திக்கும் நான்கு சூப்பர் மூன்களில் ஜூலை மாத பக் மூன் என்று அழைக்கப்படும் சூப்பர் மூனும் ஒன்றாகும்.
இது 2023 ஆம் ஆண்டில் நமது கிரகத்திற்கு மிக நெருக்கமான இரண்டாவது சூப்பர் மூன் என்று அறிவியல் மைய ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதன் மிக அருகில், சந்திரன் பூமியிலிருந்து சுமார் 362,000 கிமீ தொலைவில் இருக்கும். ஜூலை 3 அன்று, சூப்பர் மூன் தென்கிழக்கு திசையில் இருந்து இரவு 7:13 மணிக்கு உதயமாகும்.
மதியம் 1:25 மணி வரை, அது தென்மேற்கு நோக்கிச் செல்வதற்கு முன், அது அடையும் வானத்தின் மிக உயர்ந்த புள்ளியான மெரிடியனில் உச்சம் பெறும். ஜூலை 4 காலை 7:40 மணிக்கு தெரியும் என்று கூறப்படுகிறது. இந்த சூப்பர் மூன் சிங்கப்பூரில் இருந்து தெரியும் என்றும், அன்று சிங்கப்பூர் முழுவதும் இரவு 9 மணி முதல் நிலவு தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன் வெறும் கண்களில் தெரியும். இருப்பினும், வளிமண்டல நிலைமைகள் மற்றும் உங்கள் குறிப்பிட்ட இருப்பிடத்தைப் பொறுத்து சந்திரனின் தோற்றம் மாறுபடலாம் என்று அறிவியல் மைய ஆய்வகம் குறிப்பிட்டது. பக் மூன் என்பது சந்திரனின் சுற்றுப்பாதை பூமிக்கு மிக அருகில் இருக்கும் போது தோன்றும்.
இது வழக்கத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் இருக்கும். பக் மூனின் பெயர் முதன்முதலில் பூர்வீக அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. ஏனெனில் பக்ஸ் என்று அழைக்கப்படும் ஆண் மான்கள் ஜூலை மாதத்தில் புதிய கொம்புகளை முளைப்பதைக் காண முடிந்தது என்ற ரீதியில் உருவாகியது என்று கூறுகின்றனர்.