அரச குடும்பத்தில் இருந்து இங்கிலாந்து இளவரசர் ஹாரி விலகல் !! உழைத்து பிழைக்கப் போவதாக அறிவிப்பு !!
இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி மற்றும் இளவரசி மேகன் ஆகிய இருவரும் வெளியேறுகின்றனர். சுதந்திரமாக வேலை செய்து, சுயமாக சம்பாதித்து வாழ ஆசைப்படுவதாக ஹாரி அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் அரச குடும்பம் என்றாலே உலக அளவில் தனி மரியாதை உண்டு. அந்த நாட்டு அரசு எடுக்கும் முடிவுகளில் அரச குடும்பத்தின் முக்கிய பங்கு இருக்கும். அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அரசின் ஓர் அங்கமாக பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி அறிவித்துள்ளனர்.
இங்கிலாந்து அரசு மற்றும் அரச குடும்பத்தின் அதிகாரம் மீது ஹாரி, மேகன் ஆகிய இருவரும் பற்றில்லாமல் இருந்து வந்த நிலையில் அந்த தம்பதி இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக, அவர்கள் இன்ஸ்டாகிராமில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.
அதில் பல மாத ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகவுள்ளோம். சுதந்திரமாக வேலை செய்து, சுயமாக சம்பாதித்து வாழ ஆசைப்படுகிறோம் என தெரிவித்துள்ளனர்..
அதேநேரம் இங்கிலாந்து அரசுக்கும், ராணிக்கும் தேவையான எங்களது உதவிகள் தொடரும். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த விஷயத்தைச் செய்ய நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், தற்போது நாங்கள் முடிவெடுத்துவிட்டோம்.
இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவில் எங்களின் நேரத்தை சமமாகச் செலவிடத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் புவியியல் சமநிலை எங்கள் மகனை, அவர் பிறந்த அரச பாரம்பரியத்தை பற்றிய புரிதலுடன் வளர்க்க உதவும்.
அதேநேரம் இந்த முடிவு எங்கள் குடும்பத்துக்கு அதிக கவனம் செலுத்துவதற்கான இடத்தையும் வழங்குகிறது. ராணி, காமன்வெல்த் மற்றும் எங்கள் ஆதரவாளர்களுக்காக வேலை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
நாங்கள் புதிய தொண்டு நிறுவனம் தொடங்கவுள்ளோம். எங்களின் இந்த அற்புதமான அடுத்த கட்டத்தின் முழு விவரங்களையும் சரியான நேரத்தில் பகிர்ந்துகொள்வோம்.
நாங்கள், இங்கிலாந்து ராணி, வேல்ஸ் இளவரசர், கேம்பிரிட்ஜ் டியூக் மற்றும் அனைத்துக் கட்சிகளுடனும் ஒத்துழைக்கிறோம். இதுவரை எங்களுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்களின் நன்றிகள் என ஹாரி தெரிவித்துள்ளார்..
இளவரச தம்பதியின் இந்த திடீர் அறிவிப்பு இங்கிலாந்து மக்களுக்கு மட்டும் இன்றி அரச குடும்பத்துக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. ஏனெனில் அவர்கள் அரச குடும்பத்தை சேர்ந்த யாரிடமும் கலந்தாலோசிக்காமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், இளவரசர் மற்றும் இளவரசியின் முடிவால் அரச குடும்பம் கவலை அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாரி-மேகன் தம்பதியின் இந்த முடிவு அவர்களுக்கும் அரச குடும்பத்துக்கும் இடையிலான மிகப்பெரிய பிளவாக பார்க்கப்படுகிறது. அவர்களின் இந்த முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.அவர்களின் புதிய பங்கு என்னவாக இருக்கும்? அவர்கள் எங்கு வாழ்வார்கள், அதற்கு யார் பணம் கொடுப்பார்கள்? இனி அரச குடும்பத்துடன் அவர்களுக்கு என்ன உறவு இருக்கும்? போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.