சீனாவின், அன்ஹுயி மாகாணத்தைச் சேர்ந்தவர், ஜாங். இவர் கடந்த, 1983ல், கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார்.ஹைனான் மாகாணத்தில் உள்ள, சான்யா நகர துணை மேயராகவும், தான்ஜாவு நகர மேயராகவும் பணியாற்றினார். ஹைனான் மாகாண தலைநகரான ஹைகுவில், கம்யூனிஸ்ட் கட்சியின் செயலராக இருந்தார், இது, மேயர் பதவிக்கு நிகரானது.

இந்நிலையில், ஜாங் வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்பு தங்க கட்டிகள் உள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது வீட்டில், போலீசார் மற்றும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அப்போது, ஒரு அறையில், தங்க கட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம், 13.5 ஆயிரம் கிலோ அளவுக்கு தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு, 4.5 ஆயிரம் கோடி ரூபாய் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், அவரது வங்கி கணக்கில், 2.61 லட்சம் கோடி ரூபாய் பணம் இருந்ததும் தெரிய வந்தது. அவரது வங்கி கணக்கை, அதிகாரிகள் முடக்கினர்.

இதெல்லாம், அவர், மேயர் உட்பட பல பதவிகளை வகித்த போது, ஊழல் செய்து சம்பாதித்த பணம் என, கூறப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்தான், சீனாவிலேயே பெரும் பணக்காரராக இருப்பார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி, ஜாங்கிடம், போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.