மக்கள் உயிரைவிட பொருளாதாரம் தான் முக்கியம்..!! கொடூர முகத்தை காட்டிய ஜனாதிபதி..!!
போல்சனாரோ தனது அரசு இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார். அப்போது அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை மேற்கோள்காட்டி பல கருத்துக்களை முன்வைத்தார்
அமெரிக்காவில் ஊரடங்கை தளர்த்துவது தேவையற்ற துன்பத்தையும் அதிக அளவில் மரணத்தையும் ஏற்படுத்தும் என அமெரிக்கா தொற்றுநோய் தடுப்பு நிபுணர் அந்தோனி ஃபாசி எச்சரித்துள்ளார் அதே நேரத்தில் ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் காட்ட வேண்டாமென பல்வேறு நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனமும் வேண்டுகொள் விடுத்துள்ளது . உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , சுமார் 42 லட்சத்து 74ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 87 ஆயிரத்து தாண்டியுள்ளது . மற்ற நாடுகளைவிட இந்த வைரஸால் இதுவரை அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அங்கு மட்டும் 13 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . சுமார் 81 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் அதற்கடுத்து ஸ்பெயின் இத்தாலி பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கொரோனாவுக்கு ஆட்பட்ட ரஷ்யா நோய் தொற்று எண்ணிக்கையில் மளமளவென உயர்ந்து உலக அளவில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது .
ரஷ்யாவில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 243 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இங்கிலாந்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்தை கடந்துள்ளது . இப்படி உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கட்டுங்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் , இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. அதே நேரத்தில் இன்னும் பல நாடுகள் என்ன ஆபத்து நேர்ந்தாலும் பரவாயில்லை நாட்டின் பொருளாதாரம்தான் முக்கியம் என ஊரடங்கை தளர்த்த முடிவு செய்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து எச்சரித்துள்ள , உலக சுகாதார நிறுவனத்தின் அவசரத் தலைவர் மைக்கேல் ரியான் தற்போது சில நாடுகள் கொரோனா வைரஸ் போரில் ஊரடங்கை நீடித்திருப்பது பாராட்டுக்குரியது என தெரிவித்துள்ளார். நோய்த்தொற்று விகிதம் இறப்பு விகிதம் பெருமளவில் வீழ்ச்சி அடைந்து வருவது நம்பிக்கையின் அடையாளமாக உள்ளது எனவும் கூறியுள்ள அவர், இன்னும் பல நாடுகள் சுகாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் புதிய நோய்த்தொற்று உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்த முடியும் எனவும் கொரோனா இரண்டாவது அலையை தவிர்க்க அது உதவும் எனவும் எச்சரித்துள்ளார்.
தற்போது தென்கொரியா மற்றும் சீனாவில் புதிய நோய்த்தொற்றுகள் அதிகரித்திருப்பது கவலையே ஏற்படுத்தியுள்ளதாகவும் ரியான் தெரிவித்துள்ளார். அதை விட மிக முக்கியமாக உலக நாடுகள் ஊடரங்கை தளர்த்துவதில் அவசரம் காட்டக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு வலியுறுத்தியுள்ள நிலையில் அமெரிக்கா தொற்றுநோய் தடுப்பு நிபுணர் அந்தோனி ஃபாசி , அமெரிக்காவில் ஊரடங்கு முன்கூட்டியே தளர்த்துவது தேவையற்ற துன்பங்களையும் மரணத்தையும் அதிகப்படுத்தும் என எச்சரித்துள்ளார் . நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தளர்த்துவதன் மூலம் மீண்டும் அமெரிக்காவில் நோய்த் தொற்று வேகம் எடுக்கும் என்றும் அமெரிக்காவை அது இன்னொரு மோசமான திசையில் தள்ளி விடும் எனவும் எச்சரித்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவில் இந்த வார இறுதியில் பல பிராந்தியங்கள் (நியூயார்க் நகரம் தவிர்த்து) தங்கள் தொழிற்சாலைகளையும் அதன் உற்பத்தியையும் தொடங்க உள்ளன, கலிபோர்னியாவில் எலோன் மஸ்க் ஊரடங்கு சட்டங்களையும் மீறி தனது டெஸ்லா தொழிற்சாலையை திங்கள்கிழமை பிற்பகல் மீண்டும் திறந்தார், அதே போல் ஈரானிலும் ஊரடங்கு நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
அனைத்து மசூதிகளும் செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மீண்டும் திறக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வ ஐ.ஆர்.ஐ.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை இஸ்லாமிய மேம்பாட்டு அமைப்பின் இயக்குனர் முகமது கோமி உறுதி செய்துள்ளார். இதற்கிடையில் பிரேசிலின் ஜனரஞ்சக ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ திங்கட்கிழமையன்று ஜிம்கள் மற்றும் சலூன்களை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்தார். இது மட்டுமின்றி ஒரு நாட்டிற்கு பொருளாதாரமே முக்கியம் , உயிர் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பப்படுவதுபோல வேலைக்காகவும் எழுப்பப்படவேண்டும் , என்று போல்சனாரோ தனது அரசு இல்லத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போது கூறினார். அப்போது அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பை மேற்கோள்காட்டி பல கருத்துக்களை முன்வைத்தார். அதாவது "பொருளாதாரம் இல்லாமல் வாழ்க்கை இல்லை, மருத்துவர்கள் இல்லை, மருத்துவமனை பொருட்கள் இல்லை." என ஆக்ரோஷமாக பேசினார் அவர்.