சாம்பல் காடான அமேசான்.. அழிந்து வரும் பூமியின் நுரையீரல்... ஜி7 நாடுகளின் உதவியை உதறித் தள்ளிய பிரேசில் அரசு!!
பிரேசிலின் அமேசான் காடுகளில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயால் அது தற்போது சாம்பல் காடாக மாறி வருகிறது. அந்த தீயை அணைக்க 160 கோடி ரூபாய் கொடுப்பதாக கூறிய ஜி 7 நாடுகளின் உதவியை பிரேசில் அரசு மறுத்திருக்கிறது.
அமேசான் காடு 55 லட்சம் சதுரடி நிலப்பரப்பில் பரந்து விரிந்திருக்கிறது. இங்கு பல்வேறு அரிய வகை தாவரங்களும் உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்த காடுகளில் இருந்த உலகிற்கு 20 சதவீத ஆக்ஸிஜன் வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த நிலையில் இங்கு வரலாறு காணாத அளவில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.
மிக வேகமாக பரவும் இந்த காட்டுத் தீயில் சிக்கி பறவைகள், விலங்குகள் பல உயிரிழந்திருக்கும் என்றும் மேலும் அரிய வகை தாவரங்கள் பலவும் அழிந்திருக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. இந்த காட்டு தீயால் பிரேசில், பொலிவியா, பெரு, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவியுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
தற்போது கோடைகாலமான பிரேசிலில் இந்த ஆண்டு இது வரையிலும் 74 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவிபத்து நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அது கடந்த ஆண்டை விட 85 சதவீதம் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுக்கடங்காமல் எறியும் காட்டுத் தீயை அணைக்க பிரேசில் அரசு கடுமையாக போராடி வரும் நிலையில் தற்போது தீயை கட்டுக்குள் கொண்டு வர 44000 தீயணைப்பு மற்றும் ராணுவ வீரர்களை களமிறங்கியுள்ளனர். அடர்ந்த காடுகளுக்குள் சென்று கொளுந்துவிட்டு எரியும் மரங்களில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உலகத்தின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத தீ விபத்து இயற்கைக்கும் மனித குலத்திற்குமே பேராபத்து என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த காட்டுத் தீயை அணைக்க ஜி 7 நாடுகள் சார்பாக 160 கோடி ரூபாய் கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த உதவியை தேவையில்லை என்று மறுத்துவிட்டது பிரேசில் அரசு.