நோபல் பரிசை மீது என்ன கோபமோ?...3 மாதத்துக்கு பின் விருப்பமில்லாமல் பெற்ற பாப் டிலன்…

ஸ்டாக்ஹோம், ஏப்.3:- இலக்கியத்திற்கான நோபல் பரிசை 3 மாதங்களுக்கு பின்னர் அமெரிக்க நாட்டுப்புற பாடகர் பாப் டிலன் நேற்று முன்தினம் பெற்றுக்கொண்டார். இதனால் 3 மாதங்களாக நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

இசைக் கலைஞர்

2016-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு விழா கடந்த டிசம்பர் 10-ந்தேதி நடைபெற்றது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவின் நாட்டுப்புற இசைக் கலைஞர் பாப் டிலனுக்கு (75) வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நோபல் பரிசு வழங்கும் விழாவில் டிலன் பங்கேற்கவில்லை. இதற்கான காரணத்தையும் அவர் விளக்காததால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த நிலையில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக சுவிட்சர்லாந்தின் ஸ்டாக்ஹோம் நகருக்கு டிலன் வந்திருந்தார்.

ரகசிய இடத்தில்

இதையடுத்து ரகசிய இடத்தில் வைத்து அவருக்கு நேற்று முன்தினம் இரவு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நோபல் அகாடமி உறுப்பினர்கள் 12 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக நோபல் பரிசு கமிட்டியின் நிரந்தர செயலாளர் சாரா டேனியஸ் தெரிவித்துள்ளார். விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற டிலன், அதனை பெற்றுக் கொண்டு மறுவார்த்தை ஏதும் பேசாமல் சென்று விட்டார்.

‘நன்றி’ சொல்லவில்லை

இது விருதினையும், விழாவையும் அவமதிப்பது போல் உள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதுகுறி்த்து நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜாப்ளம் என்பவர் கூறுகையில், நோபல் அறக்கட்டளை மற்றும் சுவிஸ் நாட்டு மக்களைப் பற்றி டிலன் என்ன கூறுவார் என்பதை கேட்பதற்காக நான் இங்கு வந்தேன். ஆனால் அவர் ஒருவார்த்தை கூட பேசவில்லை. குறைந்தபட்சம் ‘நன்றி’ என்றாவது கூறியிருக்க வேண்டும் என்றார்.

பரிசுத்தொகை வழங்கப்படுமா?

நோபல் பரிசு வென்றவர்களுக்கு விருதும், 8,91,000 அமெரிக்க டாலர் (ரூ.5.77 கோடி) பரிசுத்தொகையும் வழங்கப்படும். பரிசுத்தொகையை பெறுவதற்கு விருதுபெற்றவர் மேடையில் பேச வேண்டும் அல்லது வீடியோவில் பேசி அதனை வெளியிட வேண்டும். அல்லது குறைந்த பட்சம் பாடல் பாட வேண்டும். இவற்றில் எதையும் டிலன் செய்யாததால் அவருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் மீண்டும் மேடையில் பேசி அதனை பெற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை ஜூன் 10-ந்தேதிக்குள் செய்தால் மட்டுமே அவருக்கு பரிசுத்தொகை கிடைக்கும்.