உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, மெக்சிகோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த மேயர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி உள்ளது. இதற்கு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. உலகம் முழுவதும் 15,11, 346 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 88,403 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 28,011 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 4 ,28,346 ஆக அதிகரித்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 1,895 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 , 736 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், அமெரிக்காவிற்கு அருகில் இருக்கும் மெக்சிகோவிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. தற்போது, 2,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 141 பேர் உயிரிழந்துள்ளனர். 'கொரோனா பாதிப்பு அதிகமுள்ள அமெரிக்காவில் இருந்து யாரும் தங்கள் நாட்டிற்குள் நுழையக் கூடாது. அவர்களை அனுமதித்தால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும்' என, மெக்சிகோ மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால், நாட்டின் எல்லைகளை மெக்சிகோ அரசு மூடியுள்ளது.

இந்நிலையில், தெற்கு மெக்சிகன் பகுதியில் உள்ள மகஹூல் நகர மேயர் ஓபிட் துரோன் கோமிஸ், தனது நகரில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிற்பித்தார். அந்த நகரில் வாகனப் போக்குவரத்து முடக்கப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன. இதனால், போதைப் பொருட்களை கடத்த முடியாமல் தவித்த கும்பல் கடுப்பில் மேயரை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில், மேயர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மக்கள் நலனுக்காக ஊரடங்கு பிற்பித்தவரை போதைக் கடத்தல் கும்பல் சுட்டுக் கொன்றது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.