சீனாவில் அதிகரித்து வரும் காற்றுமாசைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைநகர் பெய்ஜிங் நகரில் உலகின் மிகப்பெரிய காற்று சுத்திகரிக்கும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மெகா காற்று சுத்திகரிப்பான் எந்திரத்தை நெதர்லாந்தைச் சேர்ந்த பொறியாளர் டான் ரூஸ்கார்டே என்பவர் நிறுவியுள்ளார். ஏறக்குறைய 23 அடி உயரம் கொண்ட இந்த காற்று சுத்திகரிப்பான் எந்திரம் மணிக்கு 30 ஆயிரம் கியூபிக் மீட்டர் காற்றை சுத்தம் செய்யும் தன்மை கொண்டதாகும். இந்த எந்திரம் கடந்த மாதம் 29-ந்தேதி நிறுவப்பட்டது.

இது குறித்து பொறியாளர் டான் ரூஸ்கார்டே கூறுகையில், “ கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன், நான் பெய்ஜிங் நகரம் வந்தபோது, ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன். அப்போது அந்த ஓட்டலின் மாடியில் இருந்து பார்த்தபோது, நகரமே புகை மண்டலமாக, காற்று மாசுபட்டுக்கிடந்தது. அதன்பின் தான் இந்த காற்றுசுத்திகரிப்பான் கருவி உருவாக்கும் எண்ணம் எனக்கு வந்தது. இந்த எந்திரத்தை முதலில் நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் சோதித்தபின் இங்கு நிறுவப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.
இந்த காற்று சுத்திகரிப்பான் எந்திரம் பெய்ஜிங் நகரின் 751டி பார்க் ஆர்ட் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. ‘தி ஸ்மாக் ப்ரீ டவர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த எந்திரம், விரைவில் மக்களின் பயன்பாட்டுக்காக செயல்பாட்டுக்கு வர உள்ளது.

உலகில் மிகவும் காற்றுமாசு அதிகமுள்ள நகரங்களில் சீனத் தலைநகர் பெய்ஜிங் முக்கியமாகும். அங்கு நாளுக்கு நாள் காற்றுமாசு அதிகரித்து இம்மாத தொடக்கத்தில் உச்சத்தை தொட்டது. இதனால், அரசு சுற்றுச்சூழல்துறை, மக்களுக்கு ‘மஞ்சள் எச்சரிக்கை’ நோட்டீஸ் வெளியிட்டது.
இதில் ‘மஞ்சள் எச்சரிக்கை’ என்பது சீனாவில் காற்றுமாசைக் குறிக்கும் 4 வண்ண எச்சரிக்கைகளில் 3-வது மிக ஆபத்தான அளவாகும். ஆரஞ்சு வண்ணம் 2-வது ஆபத்தான அளவாகவும், நீல வண்ணம் குறைந்த ஆபத்தும், சிவப்பு வண்ணம் அபாயத்தின் உச்சம் என்று குறிப்பிடப்படுகிறது.

புதிதாக நிறுவப்பட உள்ள 23 அடி காற்று சுத்திகரிப்பான் எந்திரம், காற்றில் உள்ள நச்சுத்துகள்களில் 75 சதவீதத்தை ஈர்த்துக்கொள்ளும் தன்மை உடையது. அதாவது காற்றில் உள்ள 2.5 பி.எம். முதல் 10 பி.எம். வரையில் உள்ள சிறு துகல்களை ஈர்த்து சுத்தமான காற்றை வெளியிடும் தன்மை கொண்டதாகும். இந்த எந்திரம் மணிக்கு 30 ஆயிரம் கியூபிக் மீட்டர் காற்றை சுத்திகரித்து மக்களுக்கு அளிக்கும்.
இது குறித்து சீனாவின் சுற்றுச்சூழல் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லீ குஜெங் கூறுகையில், “ அதிகாரிகள் தங்கள் கடமையை மறந்துவிடக்கூடாது என்பதை எச்சரிக்க இந்த எந்திரம் நிறுவப்பட்டுள்ளது. அதேசமயம், மக்கள் சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக போராட வேண்டும் என்பதை வலியுறுத்தப்படுகிறது'' எனத் தெரிவித்துள்ளார்.
