அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மோசமான நிற வெறியர் என அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார்.  நிற பாகுபாட்டின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்த டிரம்ப் முயற்சிக்கிறார் எனவும் பிடன் குற்றம்சாட்டியுள்ளார். பயங்கர பரபரப்புகளுக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர்  மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு ட்ரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் துணை அதிபரும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகவும் ஜே பிடன் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதற்கு மத்தியில், அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரமும் அமெரிக்காவின் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை வீடியோ கான்பிரன்ஸ் மூலம்  டவுன்ஹால் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிடன், அமெரிக்காவின் முதல் இனவெறி பிடித்த அதிபர் யார் என்றால் என்னைப் பொருத்தவரையில் அது ட்ரம்பாக மட்டும்தான் இருக்க முடியும். அமெரிக்காவில் யாரும் ட்ரம்பை போல மக்களை இனவெறியுடன் அணுகியதில்லை.

இதுவரை அமெரிக்க வரலாற்றில் எந்த ஒரு குடியரசு கட்சியினரோ அல்லது நாட்டில் ஜனநாயக கட்சியினரோ இனவெறியுடன் நடந்து கொண்டதில்லை. அதிபர் ட்ரம்ப் கொரோனா வைரஸை சீனா வைரஸ் என கூறுகிறார், கொரோனாவை தவறாக கையாண்டதை மறைக்கவே அவர் அமெரிக்காவில் இனவெறியை பரப்பி திசை திருப்புகிறார். மொத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இனவெறியை பரப்புகிறார், மக்களை நிறத்தின் அடிப்படையிலும், அவர்கள் சார்ந்துள்ள நாடுகளின் அடிப்படையிலும் மக்களை அவர் மோசமாக நடத்துகிறார். அவர்களின் தோல் நிறம், வசிக்கும் இடம் மற்றும் அவர்கள் சார்ந்த நாட்டின் அடிப்படையில் அவர் மக்களை நடத்தும் விதம் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப் செயல்படும் விதம் மக்களை ஒன்றிணைப்பதற்கானது அல்ல அவர்களை பிளவு படுத்துவதற்காகத்தான். அவர் எல்லாவற்றிற்காகவும் சீனாவை குறை கூறுகிறார், அவர் சீனாவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகிறார் என ட்ரம்ப் குறித்து ஜோ பிடன் சரமாரியாக விமர்சித்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள, ட்ரம்பின்  பிரச்சார ஆலோசகர்  கேத்ரினா பியர்சன்,  ஜோ பிடன்  சொல்வதில் கொஞ்சமும் உண்மை இல்லை என்று மறுத்துள்ளதுடன்,  எல்லா மக்களையும் ட்ரம்ப் நேசிக்கிறார், அவர் அனைத்து அமெரிக்க  மக்களுக்கும் அதிகாரம் பெற வேண்டும் என பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ட்ரம்பை இன வெறியர் என்று கூறும் ஜோ பிடன் முன்பு ஒருமுறை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவை பற்றி இனவெறி கருத்துக்களை தெரிவித்தவர் ஆவார். அதாவது சுத்தமாகவும், அழகாகவும் தோற்றமளிக்கும் முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒபாமா என்று பிடன் கூறினார், பின்னர் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தது. பிடனின் கருத்து கருப்பின மக்களை மிகமோசமாக அவமதித்தது எனவும் சாடியுள்ளார்.  நவம்பர்-3ஆம் தேதி அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் வாக்கெடுப்பில் ட்ரம்பைவிட பிடன் 8 புள்ளிகள் முன்னிலையில் உள்ளார் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. கருத்துக் கணிப்பின் படி பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 46 சதவீதம் பேர் பிடனுக்கும், 38% பேர் ட்ரம்புக்கும் ஆதரவளித்துள்ளனர்.அதேபோல் 16% வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிப்போம் என்று முடிவு செய்யவில்லை எனக் கூறியுள்ளனர். எனவே அந்த 16% வாக்காளர்களை கவரும் வேலையில் ட்ரம்ப்பும், பிடனும் தீவிரம் காட்டிவருகின்றனர்.