இந்தியானாவில் உள்ள BAPS கோயில் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுதப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் இந்து கோயில்கள் மீது நடத்தப்படும் நான்காவது தாக்குதல் இதுவாகும்.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள க்ரீன்வுட் நகரில் அமைந்துள்ள போச்சசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) கோயிலை சில மர்ம நபர்கள் தாக்கியுள்ளனர். இந்தச் செயலை அமெரிக்காவில் உள்ள இந்து அமைப்புகள் வன்மையாகக் கண்டித்துள்ளன. இந்தச் சம்பவம் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு நடந்ததாகவும், காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இந்துக்களின் அமெரிக்க அறக்கட்டளை (HAF) தெரிவித்துள்ளது.

HAF சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த படங்களில், கோயில் சுவர்களில் இந்தியாவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுதப்பட்டிருப்பது தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் காலிஸ்தான் ஆதரவு ஆர்வலர்களின் ஒரு தந்திரம் என்றும், அமெரிக்க இந்துக்களுக்கு எதிரான இத்தகைய இழிவான வார்த்தைகள் வெறுப்பைத் தூண்டுபவை என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

Scroll to load tweet…

ஒரே ஆண்டில் நான்காவது தாக்குதல்

இந்துக்களின் அமெரிக்க அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஓராண்டில் அமெரிக்காவில் உள்ள ஒரு இந்து கோவில் தாக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.

செப்டம்பர் 2023 இல், நியூயார்க்கின் மெல்வில்லில் உள்ள BAPS கோயில் தாக்கப்பட்டது. அடுத்த 9 நாட்களுக்குப் பிறகு, கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவுக்கு அருகிலுள்ள ஒரு கோயில் தாக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023 இல், கலிபோர்னியாவின் நியூவார்க்கில் உள்ள கோயில் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில், தென் கலிபோர்னியாவில் உள்ள ஒரு பிரபல இந்து கோயில் சேதப்படுத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் குறித்து அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை செய்வதற்காக அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

"வெறுப்பு வேரூன்ற விடமாட்டோம்" என்று BAPS அமைப்பின் நிர்வாகிகள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். "சமூகத்துடன் இணைந்து, வெறுப்பு வேரூன்றாமல் தடுப்போம். நம் மனிதநேயமும் நம்பிக்கையும் அமைதியையும் கருணையையும் நிலைநிறுத்தும்" என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.