ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திரளும் அமெரிக்க தமிழர்கள்
ரிச்மண்ட்(யு.எஸ்). ஜன. 8-

அமெரிக்க வர்ஜீனியா மாநிலம் ரிச்மண்ட் நகரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் ஒன்று திரண்டனர். இவர்களுடன் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலத்தவர்களும் கலந்து கொண்டு ஆதரவைத் தெரிவித்தனர். ஜல்லிக்கட்டுக்கு அமெரிக்காவில் ஆதரவு திரட்டி வரும் கவிதா பாண்டியன் இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டைச் செய்திருந்தார். ரிச்மண்ட் டீப் ரன் பார்க் அரங்கத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமார் 100 பேர் நேரடியாக வருகை தந்திருந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பினர்.

நாட்டு மாடுகள் அழிவு

ஜல்லிக்கட்டு மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், பஞ்சாப் என இந்தியாவின் அனேக மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் நாட்டு மாடு வீர விளையாட்டுகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அந்தந்த மாநிலங்களில் பெருமளவில் நாட்டின மாடுகள் அழிந்து விட்டன. இருப்பதை கட்டிக்காக்கவும், மத்திய அரசின் இந்த தடையை உடைத்தெரிய வேண்டிய அவசியத்தையும் கூட்டத்திற்கு வந்திருந்த பிற மாநிலத்தவர்களிடம் வலியுறுத்தினர்.

மோடிக்கு மனு

ஜல்லிக்கட்டை பாதுகாக்க அமெரிக்காவில் 3700 பேருக்கும் அதிமானோரிடம் கையெழுத்து வாங்கி, வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தில் மூலம் மோடிக்கு மனு வழங்கியுள்ளனர்.

ஜல்லிக்கட்டின் தொன்மை

ஜல்லிக்கட்டுப் போராளி கார்த்திகேய சிவசேனாபதியுடன் பல்வழி தொலை தொடர்பு கருத்தரங்கத்திற்கு உலகத் தமிழ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தனர். தொலைபேசி வழி தொடர்பு கொண்டவர்களிடம் ஜல்லிக்கட்டின் தொன்மையை-சிந்து சமவெளிக் காலத்துச் சின்னங்கள் உவமானத்துடன் கார்த்திக்கேய சிவசேனாபதி எடுத்துக் கூறினார். அழிந்து வரும் நாட்டின மாட்டு வகைகளையும் அவற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கையெழுத்திட்ட இந்தியா

ஐ. நா சபையின் அறிவுறுத்தலில் உருவாக்கப்பட்டுள்ள Convention on Biological Diversity அமைப்பின் கொள்கைகள் 1, 2, 3 படி கால்நடைகளை பராமரித்து வரும் விவசாயிகள்தான், பாரம்பரிய கால்நடைகளின் இன விருத்திக்கும், இயற்கை சுழற்சியை சரிவர பராமரிப்பதற்கும் பாத்தியமானவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கன்வென்ஷனில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ள நாடாகும்.

இனவிருத்திக்கு

பாரம்பரிய கால்நடைகளின் இனவிருத்திக்கு ஜல்லிக்கட்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழி வழியாக வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தர்களுக்கு உரிமையானதாகும் என்றும் குறிப்பிட்டார்.

பீட்டாவுக்கு எதிர்ப்பு

விலங்குகளை கொன்ற குற்றம் சாட்டப்பட்டுள்ள அமெரிக்காவின் பீட்டா அமைப்பு, தமிழகத்தின் ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்க போராடும் இரட்டை நிலையை, அமெரிக்கர்களுக்கு தெரிவிக்கும் வகையில் பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர்.